விஜய்சேதுபதி படத்தை சன் பிக்சர்ஸ் கைவிட்டது ஏன்?
நவம்பர் 10 அன்று பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் டிஎஸ்பி படத்தின் முதல்பார்வை வெளியானது. அப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
அடுத்தமாதம் அதாவது 2022 டிசம்பரில் அப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த முதல்பார்வை வடிவமைப்பைப் பார்த்த திரையுலகினர் அனைவருக்கும் எழுந்துள்ள கேள்வி, இது சன்பிக்சர்ஸ் படமாச்சே? இந்த அறிவிப்பில் அவர்கள் பெயர் எங்கும் இல்லையே? என்பதுதான்.
2021 மார்ச் 17 ஆம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ காணொலி ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
அதில் விஜய்சேதுபதியின் 46 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பதும் முதல்பிரதி அடிப்படையில் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் தயாரித்துக் கொடுக்கிறது ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
இப்போது படம் முழுமையாகத் தயாராகி வெளியீட்டுக்கு வரும் நேரத்தில் சன் பிக்சர்ஸ் பெயர் இடம்பெறாதது ஏன்?
இந்தக் கேள்விக்கு இரண்டுவிதமான விடைகள் இருக்கின்றன.
ஒன்று, இதில் தொடங்கி இனிவரும் காலங்களில் சன் பிக்சர்ஸ் நேரடியாகத் தயாரிக்கும் படங்களில் மட்டும் அதன் பெயரைப் போட்டுக் கொள்வதெனவும் முதல்பிரதி அடிப்படையில் தயாரிக்கும் படங்களில் பெயர் போடவேண்டாமென முடிவெடுத்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இன்னொன்று படம் முழுமையாகத் தயாரான பிறகு படம் பார்த்த சன் பிக்சர்ஸின் மேலிடத்துக்குப் படம் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதால் பெயர் போடுவதைத் தவிர்த்துவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இரண்டில் எது சரி? என்பது படம் வெளியாகும்போது தெரிந்துவிடும்.











