தனுஷ் வரவில்லையாம் விஜய்சேதுபதி வருகிறார்
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அந்தத் தேதியில் அப்படம் வெளியாகாது என்று அப்படக்குழுவினரைத் தவிர அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால், அந்தத் தேதியில் விஜய்சேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும் ஒரு படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம்.
விஜய்சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள அந்தப்படத்துக்கு டிஎஸ்பி என்று பெயர் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அந்தப்படத்தைத்தான் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
அப்படம் தொடங்கியது உட்பட அப்படம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை, அப்படி இருக்கும்போது நேரடியாகப் படத்தை வெளியிடுவார்களா? என்றால், இன்றிலிருந்து அப்படத்துக்கான விளம்பரங்களைத் தொடங்கவுள்ளார்கள் என்று சொல்கிறார்கள்.
தனுஷ் படம் வராது என்பதால் இவர்கள் அந்தத் தேதியைக் குறி வைக்கிறார்கள். அதேசமயம் அந்தத் தேதியிலேயே தன்னுடைய கட்டாகுஸ்தி படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறாராம் விஷ்ணுவிஷால்.











