கமல் இப்படிச் செய்யலாமா? – கடுங்கோபத்தில் லைகா
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கடுத்து அந்நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இன்னொரு படம் நடித்துத் தருவதாகச் சொல்லிப் பெரும் தொகை பெற்றுள்ளார் கமல்ஹாசன்.
தலைவன் இருக்கிறான் என்று அப்படத்திற்குப் பெயர் வைத்திருப்பதாக அறிவிப்பெல்லாம் செய்தார்கள்.
ஆனால், அதற்குமேல் அப்பட வேலைகள் எதுவுமே நடக்கவில்லை.
இந்தியன் 2 முடிந்ததும் அந்தப்பட வேலைகளைத் தொடங்குவார் என்று லைகா நிறுவனத்தினர் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி வெளியான அறிவிப்பில், கமல்ஹாசனின் 234 ஆவது படத்தை மணிரத்னம் இயக்குகிறார் என்றும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் அப்படத்தை வெளியிடுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது.
லைகா நிறுவனர் சுபாஸ்கரன் சென்னையில் இருக்கும்போதே இந்த அறிவிப்பு வெளியானது.
அத்தகவல் அறிந்ததும் சுபாஸ்கரன் கடும்கோபம் அடைந்துவிட்டாராம்.
சுமார் நூறு கோடிவரை நம்மிடம் பணம் வாங்கியிருக்கிறார் கமல். அதற்கான வேலைகள் பற்றி எதுவும் சொல்லாமல் அடுத்த படத்தை அறிவிப்பதா? என்பதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள்.
கமல்ஹாசன் புத்திசாலித்தனமாக கமல் 234 படம் என்று அறிவித்தாலும் அப்படம் 2024 வெளியீடு என்று அறிவித்திருப்பதால் இந்தியன் 2 முடிந்ததும் அப்படத்தில் நடித்தால்தான் 2024 வெளியீட்டுக்குத் தயாராக முடியும்.
இதனால் தலைவன் இருக்கிறான் படத்தின் நிலை என்னவாகும்? கமல் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
எனவே, எங்கள் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் அடுத்த படத்துக்குப் போகவேண்டும் என்று கமலிடம் கறாராகச் சொல்வது எனவும் அதற்கு அவர் சம்மதிக்கவில்லையெனில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதெனவும் லைகா தரப்பு முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாகவே, கமல்ஹாசன் பிறந்தநாள் விருந்துக்கு அழைப்பு இருந்தும் அதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருக்கிறார் சுபாஸ்கரன்.
கமல்ஹாசன் இப்படிச் செய்யலாமா? என்பதே இப்போது பேச்சாக இருக்கிறது.











