செய்திக் குறிப்புகள்

கார்த்தியின் 25 ஆவது படம் – இன்று தொடக்கம்

2007 ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமானதிலிருந்து சனரஞ்சகமான, அதே நேரம் வித்தியாசமான படங்கள் மூலம் இரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி. 2022 ஆம் வருடத்தில், விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய அடுத்தடுத்த தொடர் வெற்றிப் படங்களுடன் வாகை சூடியுள்ள கார்த்தியின் 25 ஆவது படம் இன்று தொடங்கியுள்ளது.

ராஜுமுருகன் இயக்கும் அந்தப்படத்தின் பெயர் ஜப்பான்.

‘சகுனி’, ‘காஷ்மோரா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கைதி’, ‘சுல்தான்’ என 5 திரைப்படங்களைத் தொடர்ந்து ஆறாவது முறையாக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்தி நடிக்கும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் முதல் முறையாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த ‘புஷ்பா’ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்து மிரட்டியவர். ‘ஜப்பான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சுனில்.

25 வருடங்களாகத் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராகவும், ‘கோலி சோடா’, ‘கடுகு’ ஆகிய திரைப்படங்கள் மூலம் இயக்குநராகவும், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள விஜய் மில்டன், ‘ஜப்பான்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

2020 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்ற ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பணியாற்றுகிறார் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு கார்த்தியுடன் மீண்டும் இணைகிறார்.

மாநகரம், கைதி, டாணாக்காரன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்புப் பொறுப்பினை ஏற்றுள்ளார். தேசிய விருது வென்ற வினீஷ் மங்கலான் இந்தப் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

‘ஜப்பான்’ படத்தின் பூஜை செவ்வாய்க்கிழமை (8.11.2022) அன்று காலை திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளுடன் நடைபெற்றது.

விரைவில் தூத்துக்குடியில் முதல் கட்டப் படப்பிடப்பு ஆரம்பமாகவுள்ளது.

Related Posts