காபி வித் காதல் – திரைப்பட விமர்சனம்
ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகிய மூவரும் அண்ணன் தம்பிகள். திவ்யதர்ஷினி இவர்களின் சகோதரி. இவர்களில் ஸ்ரீகாந்த்துக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது.
ஜீவாவுக்கும் ஜெய்க்கும் திருமணம் நடத்த அப்பா பிரதாப்போத்தன் முடிவு செய்கிறார்.ஜீவா, ஐஸ்வர்யாதத்தாவுடன் மூன்றாண்டுகளாகச் சேர்ந்து வாழ்கிறார்.அவரையே அவருக்குத் திருமணம் செய்வது என்றும், ஜெய்க்கு மாளவிகா சர்மாவை மணமுடிப்பது என்றும் முடிவு செய்கிறார்கள்.
இவ்விருவர் திருமணத்திலும் ஏராள குழப்பங்கள். அவற்றைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
ஐஸ்வர்யாதத்தாவுடன் நெருக்கமான காட்சிகள், அதன்பின் மாளவிகாசர்மாவுடன் அழகிய காதல்காட்சிகள் ஆகியனவற்றில் பொருத்தமாக நடித்து இரசிக்க வைக்கிறார் ஜீவா.
பொறுப்பில்லாத இளைஞர் என்று பெயர் பெற்ற ஜெய், பொறுப்புடன் ஒரு தொழிலில் ஈடுபட முயல்கிறார். அதற்காகத் திருமணம் செய்யச் சம்மதிக்கிறார். சம்மதம் சொன்னபின் தன் வாழ்விணை உடன் இருக்கும் அம்ரிதா ஐயர்தான் என்கிற முடிவுக்கு வந்து அவரை நோக்கிச் செல்லும் காட்சிகளில் நிறைய பல்பு வாங்கி சிரிக்க வைக்கிறார்.
மனைவி மகள் என்று வாழும் இசைக்கலைஞராக ஸ்ரீகாந்த். ரைசாவில்சனின் கவர்ச்சியில் மயங்கி அவரை அனுபவிப்பதும் அவரே தம்பி மனைவியாக வரப்போகிறார் எனத் தெரிந்து பதறுவதும் நன்று.
சகோதரியாக நடித்திருக்கும் திவ்யதர்ஷினிக்கு முக்கியமான வேடம். அவரும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துகொண்டே சகோதரர்களுக்கு இடையேயான குழப்பங்களைத் தீர்த்து சுபமுடிவு ஏற்படக்காரணமாக இருக்கிறார். அவருடைய கணவர் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
அழகியலுக்கு மாளவிகா சர்மா, நல்ல தோழமைக்கு அம்ரிதா ஐயர், கவர்ச்சிக்கு ரைசாவில்சன், துரோகத்துக்கு ஐஸ்வர்யாதத்தா, சோகத்துக்கு சம்யுக்தாசாமிநாதன் என வகைக்கொரு நாயகிகளை வைத்திருக்கிறார்கள். அவரவர் வேலையைச் சீராகச் செய்து கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
திருமணம் நிகழ்த்துநராக வரும் யோகிபாபு கிங்ஸ்லி ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள்.சிறப்புத் தோற்றத்தில் வரும் ஆர்யா,விடிவி.கணேஷ் ஆகியோரும் சிரிக்க வைக்கிறார்கள்.
ஈ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் படம் வண்ணமயமாக அமைந்திருக்கிறது.
யுவனின் இசையில் பாடல்களில் இளமை இரசம்.இறுதியில் வரும் ரம்பம்பம் பாடல் ஆட்டம்போட வைத்திருக்கிறது.
தம்பிக்கு நிச்சயித்த பெண்ணைக் காதலிக்கும் அண்ணன், இன்னொருவருடன் நிச்சயமான பெண்ணைத் துரத்திக் காதலிக்கும் தம்பி, தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்தவள் தம்பிக்கு மனைவியாவதா? எனத்துடிக்கும் அண்ணன், மூன்றாண்டுகள் சேர்ந்து வாழ்ந்தவனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் போகும் பெண் உட்பட ஏராளமான வேடங்களை வைத்துக் குழப்பமில்லாமல் திரைக்கதை எழுதியிருக்கிறார் சுந்தர்சி. ஆனால் அவரையும் மீறி பார்வையாளர்களுக்குப் பல குழப்பங்கள்.
எல்லாவற்றையும் தாண்டி வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் காட்சிகள் படத்தைப் பாதுகாக்கின்றன.









