லவ் டுடே – திரைப்பட விமர்சனம்
காதலில் நம்பிக்கை வேண்டும் என்று சொல்லியிருக்கும் படம் லவ்டுடே.
நாயகன் பிரதீப் நாயகி இவானா ஆகியோர் காதலிக்கிறார்கள். அக்காதலை ஏற்றுக் கொள்ள இவானாவின் தந்தை சத்யராஜ், இருவரும் உங்கள் கைபேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களுக்குச் சம்மதமென்றால் எனக்கும் சம்மதம் என்கிறார்.
அதன்படி கைபேசிகளை மாற்றிக் கொள்வதால் பல சிக்கல்கள். அவை என்ன? அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.
இயக்குநர் பிரதீப்பே நாயகனாக நடித்திருக்கிறார், நாயகனாக நடிப்பதற்காக தனுஷ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா படங்களை நிறையப் பார்த்திருப்பார் போல. அவர்களைப் போலவே நடித்துத் தள்ளுகிறார்.சில இடங்களில் இரசிக்க முடிகிறது, பல இடங்களில் முடியவில்லை.
நாயகி இவானாவின் கதாபாத்திரத்தின் படி இக்காலப்பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட காதல்கள் அதையும் தாண்டி குறைந்தது ஓர் ஆண் நண்பர் என்றிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் அதற்கேற்ப நடித்து பெண்கள் மீது சந்தேகம் கொள்ள வைக்கிறார்.
வேணுசாஸ்திரி என்கிற அய்யங்கார் வேடத்தில் சத்யராஜ். காதலுக்கு பிராமணியம் எப்போதும் எதிரானது என்பதற்கேற்ப அவருடைய வேடம் அமைந்திருக்கிறது.சிறப்பாக நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகனின் அம்மாவாக வரும் ராதிகா பாத்திரமும் மகனிடம் அவர் பெசும் வசனமும் மேம்போக்காகப் போகும் படத்துக்கு அழுத்தம் சேர்க்கிறது.
ஆதித்யா கதிர் உள்ளிட்ட நாயகனின் நண்பர்கள் படம் இலகுவாக நகர உதவுகிறார்கள்.
யோகிபாபு ரவீனாரவி திருமணப் பேச்சு அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் ஆகியன உருவகேலிக்கு எதிராக அமைந்திருக்கிறது நல்ல விசயம்.
தினேஷ்புருசோத்தமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் நன்றாக அமைந்திருக்கின்றன. இறுதிக்காட்சியில் நாயகனும் நாயகியும் சந்திக்கும் காட்சியின் பின்னணி அழகு.
யுவனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியன படத்துக்கு இசைவாக அமைந்திருக்கின்றன.
காதலன் கைபேசி காதலி கையில் காதலி கைபேசி காதலன் கையில் ஒரு மணிநேரம் மாற்றிக் கொள்ள உடன்படும் காதலர் உண்டா? உண்டா? சொல்லுங்கள் என்ற பாவலர் அறிவுமதியின் பாடல் வரிகளைக் கதைக்கருவாக்கிக் கவனம் பெற்றிருக்கிறார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.
திரைக்கதையில் ஏராள இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இரகசியத் தவறுகளை பொதுமைப் படுத்துவது ஆகியன ஆபத்தான போக்கு.
தன்னுடைய உயர்வுக்காக சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் படமெடுக்கும் இயக்குநர்கள் வரிசையில் சேர்ந்திருக்கிறார் பிரதீப்.











