சினிமா செய்திகள்

ஆர்யாவின் அலட்டல் – கார்த்தியிடம் போன நல்ல கதை

சூது கவ்வும்,காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. அவற்றைத் தொடர்ந்து
அவர் இயக்கவுள்ள புதியபடத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

முன்னதாக, இந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஒரு திரைப்பட நிகழ்ச்சி மேடையில், ஆர்யா நடிப்பில் நலன்குமாரசாமி இயக்கும் படத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியிருந்தார்.

ஆனால், அதில் மாற்றம் நடந்திருக்கிறது. அதற்குக் காரணம் ஆர்யாவின் நடவடிக்கைதான் என்கிறார்கள்.

ஆர்யாவுக்கு சந்தை மதிப்பு இல்லாத காலத்தில் அவரை வைத்து கஜினிகாந்த்,மகாமுனி, டெடி உள்ளிட்ட படங்களை எடுத்தார் ஞானவேல்ராஜா.

அவற்றிற்குப் பிறகு ஆர்யாவை கதாநாயகனாக வைத்து நலன்குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்தார் ஞானவேல்ராஜா. அது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தபோது, தன்னுடைய மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துவிட்டதாகவும் அதனால் சம்பளமும் பன்மடங்கு அதிகம் என்றும் ஆர்யா கூறியிருக்கிறார்.

இதனால் நொந்துபோன ஞானவேல்ராஜா, ஆர்யாவை விட்டுவிட்டு வேறு கதாநாயகர்களைத் தேடத்தொடங்கினார்.

இன்னொருபக்கம், தன்னுடன் வருமாறும் வேறு தயாரிப்பாளரை வைத்து அந்தப்படத்தை எடுக்கலாம் என்று சொல்லி நலன்குமாரசாமியை அழைத்திருக்கிறார் ஆர்யா. ஆனால், நலன்குமாரசாமி அதற்கு உடன்படவில்லை.

இப்போது, அந்தக்கதை கார்த்திக்கு மிகவும் பிடித்துவிட்டதால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். ராஜுமுருகன் இயக்கும் படத்துக்கு அடுத்து இந்தப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம் கார்த்தி.

தமிழில் வெளியான அத்தனை வணிகரீதியான மாஸ் திரைப்படங்களுக்கான காணிக்கையாக இந்தப் படம் இருக்கும் என்று நலன்குமாரசாமி கூறியிருந்தார்.

அப்படிப்பட்ட ஒரு கதை ஆர்யாவின் நடவடிக்கையால் கார்த்தியிடம் சென்றிருக்கிறது.

Related Posts