ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த விருந்து – கபிலன் கலந்துகொண்டார்
கவிஞர் கபிலனின் அன்புமகள் தூரிகை செப்டம்பர் 9 ஆம் தேதி திடுமென மறைந்தார். அதனால் நிலைகுலைந்த கவிஞர் கபிலன் கடந்த ஐம்பது நாட்களாக மகள் மற்றும் மகள் நினைவுகளுடனே இருந்தார்.
மகள் கவிதைகள், மகள் பெயரில் அறக்கட்டளை என்றே இருந்துவந்த அவருக்கு நேற்றைய நாள் ஆறுதலாய் அமைந்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் முதல்பாகம் படத்தின் பெரும் வெற்றிக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு விருந்து கொடுத்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானின் இசைக்குழுவினர், பாடலாசிரியர்கள் உள்ளிட்டோர் மட்டும் கலந்துகொண்ட அந்நிகழ்வில், இயக்குநர் மணிரத்னமும் சுகாசினியும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனராம்.
அவ்விருந்தில், பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டுபாடல்கள் எழுதியுள்ள கபிலனும் கலந்து கொண்டிருக்கிறார்.
அவரைப் பார்த்ததும் அரவணைத்து அழைத்துச் சென்ற ஏ.ஆர்.ரகுமான், கபிலன் மகளின் இழப்புக்காக ஆறுதல் கூறியுள்ளார்.
இயக்குநர் மணிரத்னமும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
விரைவில், மகள் கவிதைகள் தொகுப்பு மற்றும் தூரிகை அறக்கட்டளை தொடக்கவிழா ஆகியனவற்றைக் கபிலன் நடத்தவிருக்கிறார்.
அவை தொடர்பான உரையாடல்கள் நடந்துள்ளன.
இவற்றால் ஐம்பது நாட்களாக முடங்கியிருந்த கபிலனுக்கு புதிய சிறகுகள் முளைத்துள்ளன எனலாம்.










