பிரின்ஸ் படம் 4 மணிக் காட்சி வேண்டாமென்ற சிவகார்த்திகேயன். ஏன்?
இவ்வாண்டு தீபாவளிப்பண்டிகை அக்டோபர் 24 திங்கட்கிழமையன்று வருகிறது. அதையொட்டி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார், அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
அப்படங்கள் மூன்று நாட்கள் முன்னதாகவே அதாவது அக்டோபர் 21 வெள்ளிக்கிழமையே வெளியாகவுள்ளது.
பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அதிகாலை நான்கு மணிக்கே அப்படங்களைத் திரையிடும் வழக்கம் தற்போது நடைமுறையில் இருந்துவருகிறது.
இவ்விரு படங்களையும் அதேபோல் திரையிட திரையரங்குக்காரர்கள் முன் வந்திருக்கிறார்கள்.
ஆனால், கார்த்தியின் சர்தார் படத்தை நான்கு மணிக்குத் திரையிட வேண்டாம் எட்டுமணிக்கு முதல்காட்சியைத் திரையிடலாம் என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டுவிட்டதாம்.
அதனால், நான்கு மணிக்கு பிரின்ஸ் படம் மட்டும் திரையிடப்படும் என்று சொல்லப்பட்டது.
இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாம்.
பிரின்ஸ் படத்தையும் நான்கு மணிக்குத் திரையிடவேண்டாம். ஐந்து மணிக்குத் திரையிடுங்கள் என்று சிவகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்தாராம்.
நான்கு மணி என்றால் இரசிகர்கள் எல்லாம் மூன்று மணிக்கே எழுந்து தயாராகவேண்டும் ஐந்துமணி என்றால் நான்கு மணிக்கு எழுந்தால் போதும் என்கிற நல்லெண்ணத்தில் அவர் அவ்வாறு சொன்னார் என்கிறார்கள்.
இன்னொரு பக்கம், அவர் சோதிடம் பார்த்தார்,சோதிடர் நான்கு மணிக்கு வேண்டாம் ஐந்து மணி ஆறு நிமிடத்தில் படம் தொடங்குங்கள் அமோகமாக இருக்கும் என்று கூறிய ஆலோசனையின் படியே நேரம் மாற்றப்பட்டது என்கிறார்கள்.
எதுசரி என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.










