விமர்சனம்

நானே வருவேன் – திரைப்பட விமர்சனம்

இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் கதிர் மற்றும் பிரபு ஆகியோரில் பிரபு நல்லவன் கதிர் கெட்டவன்.

பெற்ற் அப்பாவையே கொல்லும் கதிரை தனியே விட்டுவிட்டு பிரபுவுடன் வெளியூர் போய்விடுகிறார் அவர்களுடைய தாய்.

சென்னையில் ஒருவர் வட இந்தியாவில் ஒருவர் என வளரும் அவர்கள் இருவரும் கால்நூற்றாண்டுக்குப் பின் சந்திக்க வேண்டிய கட்டாயம்.

அந்தக் கட்டாயம் என்ன? எதானால் அப்படி நடக்கிறது? என்பதைப் பதைபதைப்புடன் சொல்லியிருக்கும் படம் நானே வருவேன்.

பிரபு, கதிர் ஆகிய இருவேடங்களிலும் தனுஷ் நடித்திருக்கிறார். இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு காட்டி வியக்க வைத்திருக்கிறார்.

தற்காலத்தில் நல்லதைவிட கெட்டதற்கே அதிகம் மதிப்பு என்பதற்கு எடுத்துக்காட்டாக கெட்டவனாக நடிக்கும் தனுஷின் தோற்றம், உடல்மொழி, நடிப்பு ஆகியன அமைந்திருக்கின்றன.

வீரா, சூரா என்கிற பாடலும் கெட்டவருக்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்துஜா, எல்லி அவரம் ஆகிய இருவரும் முறையே பிரபு, கதிர் ஆகியோரின் மனைவிகளாக நடித்திருக்கிறார்கள். இருவருமே சிறப்பு.

தனுஷின் மகளாக வரும் ஹியாதவேவின் வேடமும் அதில் அவருடைய நடிப்பும் படத்துக்குப் பலம்.

ஒரு காட்சியில் மட்டும் நடித்து ஓகோவென வரவேற்பு பெறுகிறார் இயக்குநர் செல்வராகவன்.

தனுஷின் மகன்களாக வரும் பிரபவ், பிரணவ் ஆகியோர் நன்று.

யோகிபாபு, பிரபு ஆகியோர் ஊறுகாய்போல் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவில் நல்லது கெட்டதுகளுக்கும் ஒளியமைப்பில் வேறுபாடு தெரிகிறது.

யுவன் இசையில் பாடல்கள் கேட்கலாம். இரண்டு தனுஷ்களும் சந்திக்கும் இறுதிக்காட்சிகளில் உடுக்கையுடன் கூடிய பின்னணி இசை சிலிர்க்க வைக்கிறது.

புவன்சீனிவாசனின் படத்தொகுப்பு படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவுகிறது.

அப்பாவையே கொல்லும் மகன், மனைவியைக் கொல்லும் கணவன், மகனைக் கொல்லும் அப்பா என சமுதாயத்துக்கும் பொதுஅமைதிக்கும் எதிரான பல காட்சிகள் இருப்பது நெருடல்.

ஆனாலும், கடைசியில் நன்மையே வெல்லும் என்று முடித்திருப்பது ஆறுதல்.

செல்வராகவனின் உருவாக்கமும் தனுஷின் ஆர்ப்பாட்டமான மற்றும் அமைதியான நடிப்பும் திரைப்பட இரசிகர்களுக்கு விருந்து.

Related Posts