யோகிபாபுவின் வாழ்க்கையில் நடந்த துயரங்கள்
இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளராக இருந்த மருத்துவர் ஐபி.முருகேஷ் முதன் முறையாக இயக்கும் படம் “மலை”. இந்தப்படத்தில் இலட்சுமி மேனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லெமன் லீஃப் கிரியேசன் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் சார்பில் ஆர்.கணேஷ் மூர்த்தி சௌந்தர்யா, மலை படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், இதே நிறுவனம் யோகிபாபுவை கதாநாயகனாக வைத்து இன்னொரு படத்தைத் தொடங்கவிருக்கிறது.
அப்படத்தை, வில்அம்பு படத்தை இயக்கிய ரமேஷ்சுப்பிரமணியம் இயக்குகிறார்.
இப்படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் இப்படத்தின் கதையை யோகிபாபுயே எழுதியிருக்கிறாராம்.
அவர் தன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து கதையாக எழுதியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதுவரை தமிழ்த் திரையுலகில் நண்பர்கள் என்றால் உயர்ந்தோர், நட்பு கற்பைப் போன்றது, உயிரையும் கொடுப்பவன் நண்பன் என்றெல்லாம் சொல்லி நட்பைப் போற்றும் படங்கள்தாம் வந்துள்ளன.
இந்தக்கதையில், தான் வளரும் காலகட்டத்தில் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டோர் செய்த இரண்டகங்களைச் சொல்லி அதனால் அவர் அடைந்த துயரங்களைப் பட்டியலிட்டு, நட்பு என்பது புனிதமானதன்று அது மிகவும் போலியானது என்று சொல்லியிருக்கிறாராம்.
இக்கதையும் திரைக்கதையும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை என்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் பத்து முதல் தொடங்கவிருக்கிறதாம்.











