கோப்ரா – திரைப்பட விமர்சனம்
ஒரிசா முதலமைச்சர், ஸ்காட்லாந்து இளவரசர், ரசிய அமைச்சர் ஆகியோரை உலகமே அதிரக்கூடிய வகையில் வித்தியாசமான தோற்றங்களில் வந்து கொலை செய்கிறார் விக்ரம்.
உள்ளூர் காவல்துறை முதல் சிபிஐ மற்றும் உலகக்காவல்துறையான இண்டர்போல் வரை அவரைத் தேடுகிறது.
அதேநேரம், அவர் பற்றிய தகவல்களை ஒரு மர்மமனிதர் இண்டர்போலிடம் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்.
விக்ரம் பிடிபட்டாரா? அவர் ஏன் அந்தக் கொலைகளைச் செய்கிறார்? விக்ரம் குறித்துத் தகவல் தரும் அந்த மர்மமனிதர் யார்? ஆகிய கேள்விகளுக்கான விடைதாம் கோப்ரா.
படம் முழுக்க விக்ரம் ஆதிக்கம்தான். ஒன்றுக்கு இரண்டு வேடங்கள், பலவித தோற்றங்கள் என ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்.
காவல்துறை விசாரணையின்போது அவருடைய நடிப்பு கைதட்டல்களை அள்ளுகிறது.
தாய்ப்பாசம் சகோதர பாசம், காதலி மீதான பாசம் ஆகியனவற்றிலும் குறைவைக்கவில்லை. எல்லாக்காட்சிகளிலும் வெற்றி மதிப்பெண் பெறுகிறார்.
விக்ரமை துரத்தித் துரத்திக் காதலிக்கும் வேடம் கேஜிஎஃப் ஸ்ரீநிதிஷெட்டிக்கு, அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். விக்ரம் அவரைப் புறக்கணிக்கும் இடங்களில் அவர் தவித்து நிற்கும்போது நமக்கு விக்ரம் மேல் கோபம் வருகிறது.
மீனாட்சி கோவிந்தராஜனுக்கு, திறமையாளர்கள் எங்கிருந்தாலும் வெளிச்சத்துக்கு வந்துவிடுவார்கள் என்பதை மெய்ப்பிக்கிற வேடம். அலட்சியமாகவும் ஆழமாகவும் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
மிருணாளினிரவியின் வேடமும் நன்று. அதிகாரமும் பணமும் கலந்த வீட்டுப்பெண் என்றாலும் அவருடைய கருணை அவருக்குப் பலம் சேர்க்கிறது.
சர்வதேசக் காவல்அதிகாரி (இண்டர்போல்) வேடத்தில் மட்டைப்பந்துவீரர் இர்ஃபான்பதான் நடித்திருக்கிறார். நல்வரவு.
வில்லனாக நடித்திருக்கும் ரோஷன்மேத்யூ, பொருத்தமாக நடித்திருக்கிறார். உங்க பத்து வருசத்த எனக்குக் கொடுத்துடுங்க என்று கேட்கும்போதே பதற வைக்கிறார்.
பத்திரிகையாளராக வரும் கே.எஸ்.ரவிக்குமார், இளவயது விக்ரமாக வரும் சர்ஜானோ காலித், ரோபோசங்கர், ஆனந்தராஜ், ஜான்விஜய் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
ஏ,ஆர்.ரகுமானின் இசையில் தரங்கிணி, தும்பி துள்ளல்லோ ஆகிய பாடல்கள் இரசிக்க வைத்திருக்கின்றன. பின்னணி இசையிலும் பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறார்.
ஹரீஷ்கண்ணனின் ஒளிப்பதிவில் வெளீநாடுகளின் பிரமாண்டங்கள் வியப்பூட்டுகின்றன. விக்ரமின் பலவித தோற்றங்களும் சிறப்பாக அமைய அவரும் காரணமாக இருக்கிறார்.
புவன்சீனிவாசன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் படத்தொகுப்பு. அவர்கள் இன்னும் கூர்மையாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.
ஒரு போராளித்தாயின் இரு மகன்களுக்கிடையேயான பாசப்போராட்டத்தை மையமாகக் கொண்டு தற்போது உலகை ஆளும் பன்னாட்டுநிறுவனங்களின் கட்டற்ற செயல்பாடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அஜய்ஞானமுத்து.
எல்லாச் செயல்களுக்கும் கணிதமே அடிப்படை எனும் கருத்தை வைத்து அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறது.
எளிமையாக எடுத்துச் சொல்லும் புத்திசாலித்தனமாக அல்லாமல் நுணுக்கமாகத் தேடிப்பார்க்கும் அதிபுத்திசாலித்தனமான திரைக்கதை பார்வையாளர்களுக்குக் குழப்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
அதைத் தவிர்த்துப் பார்த்தால்,அடர்த்தியானகதை, ஆழமான திரைக்கதை ஆர்ப்பாட்டமான காட்சிகள் ஆகியனவற்றைக் கொண்டு பிரமாண்டமான படமெடுக்க தமிழ்த்திரையுலகுக்கு இன்னொரு இயக்குநர் கிடைத்துவிட்டார்.











