அஸ்வின்ஸ் – திரைப்பட விமர்சனம்
யூட்யூப் சேனல் நடத்தும் நாயகன் வசந்த்ரவி மற்றும் குழுவினர் ஒரு தீவில் தனியாக இருக்கும் வீட்டுக்கு படப்பிடிப்பு நடத்துவதற்காகச் செல்கின்றனர். அங்கு பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றிற்குப் பின்னால் 1500 ஆண்டு காலப் பழமையான ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை திகிலுடன் சொல்லியிருக்கும் படம் அஸ்வின்.
முரட்டுத்தனத்துக்குப் பெயர்போன நாயகன் வசந்த்ரவி இந்தப்படத்தில் பயப்படவும் செய்கிறார். அதை நன்றாகச் செய்து பார்க்கும் நம்மையும் பயப்பட வைக்கிறார்.ஒரு குழுவின் தலைவனுக்கேற்ற பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.உடல்மொழியுடன் கண்களிலும் பேசியிருக்கிறார்.
நாயகி விமலாராமன், சரஸ்வதி மேனன், சிம்ரன் பரீக், முரளிதரன் ஆகியோரும் கதையின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அழகான பெண்களைப் பயத்தில் பதற வைத்து அதற்குள் நம்மையும் ஆட்படுத்தியிருக்கிறார்கள்.
எட்வின்சாகேவின் ஒளிப்பதிவில் எல்லைதாண்டி விரியும் காட்சிகள் பரவசமூட்டுகின்றன. அழகிருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பதைக் காட்சிகளிலேயே விவரித்திருக்கும் அவருடைய ஒளிப்பதிவு படத்தின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது.
விஜய்சித்தார்த்தின் பின்னணி இசையில் இதயம் நடுங்குகிறது, உடல் அதிர்கிறது.
தருண்தேஜா எழுதி இயக்கியிருக்கிறார். அவர் அடிப்படையில் ஓர் எழுத்தாளர் என்பதால், காட்சிகளில் முழுமை தெரிகிறது.
அமானுஷ்ய விசயங்களை வைத்துக் கொண்டு ஆழமான உளவியல் சிக்கல்கள் பற்றிப் பேசியிருக்கிறார்.
தற்கால நிகழ்வுகளை பழங்காலத்தோடு தொடர்பு படுத்தியிருப்பது திரைக்கதை அடர்த்தியாக அமையக் காரணமாக இருக்கிறது.
திகில் படங்களுக்கு எடுத்துக்காட்டாக ஆங்கிலப்படத்தைச் சொல்பவர்கள் இனிமேல் இந்தப்படத்தையும் சேர்த்துச்சொல்லலாம்.
– ராஜன்











