சினிமா செய்திகள்

அடுத்த படமும் தெலுங்குத் தயாரிப்பாளருக்கே – சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு

சிவகார்த்திகேயன் இப்போது, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போதைக்கு ‘எஸ்கே20’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை, ‘ஜதி ரத்னலு’என்கிற தெலுங்குப் படம் மூலம் புகழ் பெற்ற கே்வி.அனுதீப் இயக்குகிறார்.

சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு (சிவாஜி கணேசன் நடித்த “வசந்த மாளிகை” பட பிரபல தயாரிப்பாளர் புகழ்ராமாநாயுடு மகன்), நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் SVCLLP (Sree Venkateswara Cinemas LLP) மற்றும் Shanthi Talkies அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

பிப்ரவரி 10, 2022 இல் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கடுத்து, மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் புதியபடமொன்றில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இப்படத்தை ஐசரிகணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போகிறது என்றும் எஸ்கே 20 படத்தில் இணைதயாரிப்பாளராக இருக்கும் அருண்விஷ்வாவே தனியாகத் தயாரிக்கப்போகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

இப்போது அவர்கள் இருவருமே தயாரிக்கவில்லை, எஸ்கே 20 படத்தைத் தயாரிக்கும் தெலுங்குப்பட நிறுவனத்துக்கே இந்தப்படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை சிவகார்த்திகேயன் வழங்கிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

எஸ்கே 20 படத்தயாரிப்பின்போது அவர்கள் சிவகார்த்திகேயன் மகிழும்படியாக நடந்துகொண்டதால் அடுத்த படத்தையும் அவர்களுக்கே கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.

ஜூன் தொடக்கத்திலேயே அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

Related Posts