எதற்கும் துணிந்தவன் – விமர்சனம்
அண்ணா ப்ளீஸ் விட்டுடுங்கண்ணா என்கிற கதறலைக் கேட்டுக் கலங்கிய நாம் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட, அதை ஒரு திரைக்கதையாக்கி அப்படிச் செய்தவர்களுக்கு உரிய தண்டனை கொடுத்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்ட பாண்டிராஜ் நமக்கும் ஆறுதல் தந்திருக்கிறார்.
இரத்தம் தெறிக்கத் தெறிக்க, கொலை செய்யலம்மா களை எடுத்திருக்கேன் என்று சொல்லிக்கொண்டு அறிமுகமாகும் சூர்யா, படம் முழுக்க உற்சாகமாகப் புகுந்து விளையாடியிருக்கிறார்.
அட்டகாசமான அறிமுகம் அம்மாவிடம் குழைவு அப்பாவிடம் பணிவு காதலியிடம் கனிவு எதிரிகளிடம் துணிவு என எல்லாவகை உணர்ச்சிகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி இரசிகர்களைக் கவர்கிறார் சூர்யா.
நாயகியாக பிரியங்காமோகன். உடலைக்கடந்து பெண் வரவேண்டும் என்கிற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக அவர் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார்கள். காதல் காட்சிகளில் ஒரு சின்னப்புன்னகையில் கவர்கிற பிரியங்காமோகன், அந்த வீடியோ பாத்தியா? முழு வீடியோ அனுப்பு என்கிறவர்களைப் பற்றிப் பேசும் காட்சியில் நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்.
சூர்யாவின் அப்பாவாக சத்யராஜ் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், உறவினர்களாக இளவரசு, தேவதர்ஷிணி, எம்.எஸ்.பாஸ்கர், வேல இராம்மூர்த்தி ஆகியோர் மிக நன்று.
மகளுக்கு திடீர்கல்யாணம் அதையொட்டி இளவரசு வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்றன.
சூரி, இராமர், தங்கதுரை, புகழ் ஆகியோர் தங்கள் பங்குக்கு நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
வினய்யின் பாத்திரம் கொடூரமானது, அதில் நன்றாக நடித்து நம்மைக் கொலைவெறிக்கு ஆளாக்குகிறார்.
ரத்னவேலுவின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்குப் பலம்.
இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம். பின்னணி இசை அளவு.
எழுதி இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ். உடல்களைக் கடந்து பெண்கள் வரவேண்டும் என்பதோடு பெண்ணுடல் சம்பந்தப்பட்ட காணொலிகள் வெளியாகும் போதெல்லாம் அவற்றை இந்தச் சமுதாயம் எப்படியெல்லாம் எதிர்கொள்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் வசனங்களில் மக்களின் மனசாட்சியை உலுக்கி எடுத்துவிட்டார்.
வில்லனுக்கு வடநாடு, முருகக் கடவுள், ஊர்ப்பெயர்கள், கதாபாத்திரப் பெயர்கள் என எல்லாவற்றிலும் தான் யார்? எண்பதைக் காட்டிவிடுகிறார்.
மனைவிக்குச் சூர்யா சொல்லும் ஆறுதல்கள் ஒரு பெண்ணுக்கானது மட்டுமன்று ஒட்டுமொத்தப் பெண்களுக்குமானது. அந்த வசனங்கள் படத்தலைப்புக்கு நூறல்ல ஆயிரம் விழுக்காடு நியாயம் செய்கிறது.
குடும்பத்தோடு பார்த்து இரசிக்கவும் பாடம் படிக்கவும் ஏற்ற படம்.











