விமர்சனம்

காளி – திரைப்பட விமர்சனம்

வெளிநாட்டில் புகழ்பெற்ற மருத்துவராக இருக்கும் விஜய்ஆண்டனி, தன் பெற்றோரைத் தேடி தமிழகம் வருகிறார். வந்த இடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்கிற ஒற்றை வரிக் கதையை சுவாரசியமான திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையில் ஆக்கப்பட்டிருக்கும் படம்தான் காளி.

மருத்துவராக மட்டுமின்றி திருடன், கல்லூரி மாணவன், அருட்தந்தை ஆகிய வேடங்களிலும் வருகிறார் விஜய்ஆண்டனி.

கதாநாயகனுக்கு நான்கு தோற்றங்கள் என்பதால் நாயகிகளும் நான்கு பேர் இருக்கிறார்கள்.

அஞ்சலி வழக்கம்போல, சுனைனாவும் ஷில்பாமஞ்சுநாத்தும் கவனம் ஈர்க்கிறார்கள். அம்ரிதா அழகு.

சிரிக்க வைக்க யோகிபாபு இருக்கிறார். ஆர்.கே.சுரேஷுக்கு இந்தப்படம் நற்பெயர் பெற்றுத்தரும்.

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு கதைக்குப் பொருத்தம். கிராமத்துக் காட்சிகள் கூடுதல் அழகு.

விஜய்ஆண்டனியின் இசையில் பாடல்கள் கேட்கவைக்கின்றன.

இரண்டாவதாக இந்தப்படத்தை இயக்கியிருக்கும் கிருத்திகா உதயநிதி, இதிலும் தேர்ச்சி பெறுகிறார்.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் செல்லாமல் போயிடப் போகுது என்கிற வசனத்தின் மூலம் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டிவிடுகிறார்.

ஒரு முக்கியமான சமுதாயச் சிக்கலை மையமாக கொண்டு அதில்,அம்மா பாசம், சிரிப்பு, காதல் ஆகியனவற்றைப் போதுமான அளவில் கலந்து கொடுத்திருப்பதால் காளி கவர்கிறான்.

Related Posts