எஃப் ஐ ஆர் – திரைப்பட விமர்சனம்
இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதியா? என்று ஓங்கிக் கேட்டிருக்கும் படம் எஃப் ஐ ஆர். மத ரீதியான வெறுப்பு அரசியல் செய்யும் ஆட்சி அதிகாரம் உச்சத்தில் இருக்கும் காலத்தில் இக்கேள்வி உரக்க எழுப்பப்பட்டிருப்பது சிறப்பு.
இர்ஃபான் அகமது என்கிற வேடத்துக்காக தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் விஷ்ணுவிஷால். கட்டுறுதியான உடல், கனிவான மனம் என சாமான்ய இஸ்லாமிய இளைஞனைப் பிரதியெடுத்திருக்கிறார்.
தலைகீழாகத் தொங்கும்போது கலங்க வைக்கும் அவர், இந்த அதிகாரத்தைத் திருப்பி அடிப்பேன் என உறுதி காட்டும் நேரத்தில் உரமேற்றுகிறார்.
மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூன்று நாயகிகளும் திரைக்கதையோடு பின்னிப் பிணைந்திருக்கிறார்கள். அவரவர் வேலையைப் பொறுப்பாகச் செய்திருக்கிறார்கள்.
படத்தில் நகைச்சுவை நடிகர்கள் இல்லாத குறையைப் போக்க குணசேகர் கொல்லியப்பனாக நடித்திருக்கும் பிரவீன்குமாரும் குமரனாக நடித்திருக்கும் பிரசாந்தும் போக்க முயன்றிருக்கிறார்கள்.
பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக நடித்திருக்கும் கவுதம்மேனன், பிரதமரைவிட சக்திவாய்ந்தவராகக் காட்டப்படுகிறார். ஆனால்,நாயகனின் அம்மாவையும் நாயகனையும் சாகவிடுவது பாதுகாப்பின் பலவீனம்.
அருள்வின்செண்ட்டின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும்பலம். திருவல்லிக்கேணியின் இண்டு இடுக்குகளையும் காவல்துறையின் இருட்டறைகளையும் பிரதமர் அலுவலகம் போன்ற படோடோபங்களையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் அருள்வின்செண்ட்.
அஸ்வத்தின் இசை அளவாக அமைந்திருக்கிறது.
படத்தைத் தொகுத்திருக்கும் பிரசன்னா ஜி.கே இரண்டாம்பாதியில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
எழுதி இயக்கியிருக்கிறார் மனு ஆனந்த். இன்றைய காலகட்டத்தில் இர்ஃபான் அகமதுவை கதாநாயகனாக்கியிருப்பது துணிச்சல். திரைக்கதையோட்டம் தெளிவாக இல்லை என்பது குறை.
நாலு முஸ்லிம் பேரைச் சொன்னா நாம நம்பிடுவோம்னு அவன் நினைச்சது சரிதான்னு ஆயிடுச்சு கடவுளே என பிரவீன்குமார் ரைசாவிடம் புலம்புவதுதான் படத்தின் சாரம்.
ஒன்றிய அதிகார மையத்திலிருப்போர் அனைவரும் பார்க்கவேண்டிய படம்.











