February 12, 2025
விமர்சனம்

கேம்சேஞ்சர் – திரைப்பட விமர்சனம்

மாவட்ட ஆட்சியராக இருக்கும் நாயகன் ராம்சரண் எடுக்கும் நடவடிக்கைகளால் மாநில அமைச்சரான எஸ்.ஜே.சூர்யாவின் கோபத்தைச் சம்பாதிக்கிறார்.அமைச்சராக இருந்த அவர் முதலமைச்சராகி மாவட்ட ஆட்சியரை மாற்றும் கோப்பில் கையெழுத்திடும் நேரத்தில் தேர்தல் அறிவிப்பு வந்துவிடுவதால் அவர் பதவி அதிகாரமற்றதாகிவிடுகிறது.எஸ்.ஜே.சூர்யா தேர்தலில் வென்று மீண்டும் முதலமைச்சரானாரா? இல்லையா? என்பதை விவரிக்கும் படம்தான் கேம்சேஞ்சர்.

கல்லூரி மாணவர், காவல்துறை அதிகாரி,மாவட்ட ஆட்சியர், சமுதாயப் போராளி எனப்பல தோற்றங்களில் வருகிறார் ராம்சரண்.மாணவர் வேடத்தில் துடிப்பு,காவலதிகாரி வேடத்தில் மிடுக்கு,மாவட்ட ஆட்சியர் வேடத்தில் பொறுப்பு சமுதாயப் போராளி வேடத்தில் மக்களைக் காக்கும் தவிப்பு ஆகியனவற்றை சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார் ராம் சரண்.கூடவே காதல் காட்சிகளில் கனிவும் சண்டைக்காட்சிகளில் துணிவும் காட்டியிருக்கிறார்.

இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்திருக்கிறார்.காதலனை நல்வழிப்படுத்தும் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது.அதற்கேற்ப நடித்திருப்பதோடு பாடல் காட்சிகளில் உடலழகைத் தாரளமாகக் காட்டியிருக்கிறார்.

எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா,தன் வழக்கமான நடிப்பின் மூலம் வேடத்தை நிறைவு செய்கிறார்.

இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலியின் முதுமைத் தோற்றம் வியப்பு.இளமைத் தோற்றத்தில் வரும் பாட்டும் அதில் அவர் நடனமும் சிறப்பு.

முதலமைச்சராக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த்,கூடவே வரும் சமுத்திரக்கனி, முதலமைச்சரின் மூத்தமகனாக வரும் ஜெயராம் ஆகியோர் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.நகைச்சுவைக்காக இருக்கும் சுனில்,வெண்ணிலா கிஷோர் ஆகியோர் சோதிக்கிறார்கள்.

தமன் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் தாழ்வில்லை.

திருவின் ஒளிப்பதிவில் காட்சிகளில் பிரமாண்டம்.ஜருகண்டி பாடல் காட்சி புது அனுபவம் கொடுக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

கார்த்திக்சுப்புராஜின் மூலக்கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் ஷங்கர்.ஐதர் அலி காலத்துக்குக் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருக்கிறார்.அதை தன் திரைக்கதை மூலம் சமகாலத்துக்குக் கொண்டு வர முயன்றிருக்கிறார் ஷங்கர்.

நல்ல பேச்சாளர்கள் மட்டும்தான் தலைவர்களாக இயலும் என்கிற தப்பான பொதுப்புத்தியின் காரணமாகவே மொத்தக் கதையும் நடக்கிறது.அதை மீறிச் சிந்தித்திருந்தால் படமே இல்லை.

அரசு அதிகாரிகளின் செயல்பாட்டு எல்லைகள், அரசியல் சட்ட நடைமுறைகள் ஆகியன பற்றி எவ்விதப் புரிதலுமின்றி திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

கருத்தினில் பெரும்பிழை. காட்சியனுபவத்தில் நிறை.

– கதிர்

Related Posts