இறங்கி வந்த எஸ்.ஜே.சூர்யா – மார்க் ஆண்டனி பட சுவாரசியம்
விஷாலின் 33 ஆவது படத்தை இயக்கவிருப்பது ஆதிக்ரவிச்சந்திரன். தயாரிக்கவிருப்பது எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத்.
பெரும்பொருட்செலவில் பேன் இந்தியா எனப்படும் பன்மொழிப்படமாக இது உருவாகவிருக்கிறது என்று விஷால் சொல்லியிருந்தார்.
இந்தத் திரைப்படத்திற்கு ‘விஷால் 33’ என்று தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2022 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் பெயரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி, இந்தப் படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘ கடவுளே எல்லா நல்ல கதையையும் என்கிட்டவே அனுப்புறீயே’ என்றும் ‘இந்தக் கதையை மாநாடு-2 என்றே சொல்லலாம் அந்த அளவுக்குத் திரைக்கதை உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தப்படத்தில் நடிப்பதற்காக ஆறு கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.தயாரிப்பாளரோ நான்கு கோடியில் நின்றிருக்கிறார்.எஸ்.ஜே.சூர்யா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். அதனால் அவர் வேண்டாம் என்று படக்குழு முடிவெடுத்ததாம்.
அதன்பின், கதை மிகவும் பிடித்துப் போனதால் எஸ்.ஜே.சூர்யா கொஞ்சம் இறங்கிவர தயாரிப்பாளர் தரப்பும் கொஞ்சம் ஏறிவந்திருக்கிறது.
கடைசியில் ஐந்துகோடி என்று சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனராம்.











