சினிமா செய்திகள்

புது இயக்குநரின் வாய்ப்பைத் தட்டிப் பறித்த சுந்தர்சி – விவரம்

சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 படம் மே மாதம் 3 ஆம் தேதி வெளியானது. தமன்னா முதன்மை வேடத்தில் நடித்திருந்த அந்தப்படம் திரையரங்குகளில் பெரும் வசூலைப் பெற்றது. தமிழ்நாடு திரையரங்குகளில் மட்டும் சுமார் இருபத்தைந்து கோடி ரூபாயை தயாரிப்பாளரின் பங்காக வசூலித்துக் கொடுத்துள்ளது என்கிறார்கள்.

ஒரு படம் வெற்றி பெற்றால் மீண்டும் அந்தக் கூட்டணி இணைவது வழக்கம்தானே. அந்த வழக்கப்படி மீண்டும் சுந்தர்.சி தமன்னா கூட்டணி அமைகிறதாம்.

இதற்கு ஒரு முன்கதையும் இருக்கிறது.

ஸ்கிரீன்சீன் நிறுவனத்தின் சார்பில் ஒரு புதியபடம் தயாரிக்கத் திட்டமிடப்படுகிறது. அந்தப்படத்தை இயக்க சிறுத்தைசிவாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பூபாலன் என்பவர் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்.அவர் வைத்திருந்த கதை, பக்தியை அடிப்படையாகக் கொண்டு கதாநாயகியை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை.

அக்கதையை அவர் தமன்னாவிடம் சொல்லியிருக்கிறார். அவருக்கும் கதை பிடித்தது.அந்தப் படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.அதனால் அவருக்கு ஒரு சம்பளம் பேசி முன் தொகையும் கொடுக்கப்பட்டதாம். இவையெல்லாம் சில பல மாதங்களுக்கு முன் நடந்தவை.

கதை,கதாநாயகி,தயாரிப்பு நிறுவனம் ஆகிய அனைத்தும் இருந்தும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.இயக்குநர் பூபாலன் காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில்தான் அரண்மனை 4 படம் வெளியாகி வெற்றியும் பெறுகிறது.

அப்படம் வெற்றி என்றவுடன் சுந்தர்.சியை வைத்துப் படம் தயாரிக்க சில நிறுவனங்கள் முன் வருகின்றன.அவற்றில் ஸ்கிரீன்சீன் நிறுவனமும் ஒன்று.

அவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் போது பூபாலன் தமன்னா படம் பற்றியும் பேச்சு வந்திருக்கிறது.

அதைக் கேட்ட சுந்தர்.சி, அந்தக் கதையை என்னிடம் கொடுங்கள்,நான் தமன்னாவை வைத்தே அப்படத்தை எடுத்துவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

மாதக்கணக்கில் காத்திருந்த பூபாலனுக்குப் பேரரதிர்ச்சி. ஆனாலும் வேறு வழியில்லாமல் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை.
ஒப்புக்கொள்கிறார்.

அதேசமயம் கதையை வாங்கிக் கொண்டு சும்மா அனுப்பிவிடாமல் அவருக்கு அந்தக் கதைக்காக சுமார் பத்து இலட்சம் ரூபாய் கொடுத்துவிட்டார்களாம்.

அவரும் இதுவே மகிழ்ச்சி என்று சொல்லி பணத்தைப் பெற்றுக்கொண்டு கதையைக் கொடுத்துவிட்டு வெளியே போய்விட்டாராம்.

இதனால்,அரண்மனை 4 படத்துக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் தமன்னா நடிக்கவிருக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.

பூபாலன் இயக்குநராகவிருந்த வரையில் அது சாமி படமாக இருந்தது. இப்போது சுந்தர்.சி கைக்கு வந்திருப்பதால் சாமி படமாகவே தொடருமா? பேய்ப்படமாக மாறிவிடுமா? என்பது போகப் போகத் தெரியும்.

Related Posts