கன்னட சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் புனீத்ராஜ்குமார் திடீர் மரணம்
கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் புனீத் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் காலமானார். அவருக்கு வயது 46.
இது கன்னட திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகையே பெரும அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கன்னட முன்னணி நடிகர் ராஜ்குமாரின் மகன் தான் புனித் ராஜ்குமார். பவர் ஸ்டார் என்ற பட்டம் கொண்ட புனித் 29 படங்களில் நடித்துள்ளார்.
கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் புனித் ராஜ்குமார் 1975 இல் சென்னையில் பிறந்தவர். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல தளங்களில் பணிபுரிந்தவர். பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
இவருடைய நடிப்பில் இறுதியாக ‘யுவரத்னா’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘ஜேம்ஸ்’, ‘த்வித்வா’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனையடுத்து, இன்று காலை புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
புனித் ராஜ்குமார், தனியார் மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல் வெளியானவுடன், அங்கு இரசிகர்கள் குவியத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
மேலும், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்துள்ளார்.
இதனையடுத்து. அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அரசியல் கட்சியினர், உறவினர்கள், சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட பலர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளதால், மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பெங்களூரு கண்டீரவா ஸ்டேடியத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு, கர்நாடக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.











