நேரம் மாறியது – அதிகாலையில் புனித்ராஜ்குமார் உடல் அடக்கம் நடந்தது
கன்னடத் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் புனித் ராஜ்குமார்(வயது 46) நேற்று முன்தினம் பெங்களூருவில் திடீரென மரணம் அடைந்தார்.
இவர் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார்.
அவரது திடீர் மரணம், அவரது குடும்பத்தினர், இரசிகர்கள் மற்றும் கன்னட மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகையும் அவரது மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமர் மோடி,குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு,ஆளுநர் கெலாட், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கன்னடம் உள்பட இந்திய திரை உலக நட்சத்திரங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
புனித் ராஜ்குமார் மரணம் அடைந்ததாக நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து விக்ரம் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு புனித் ராஜ்குமாரின் உடலைப் பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். சுமார் 4 மணி நேரம் அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் இரவு 7 மணியளவில் புனித் ராஜ்குமாரின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கன்டீரவா மைதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அவரது உடல் பொதுமக்கள், இரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்பட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து இரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களில் இருந்தும் இரசிகர்களும், பொதுமக்களும் பெங்களூருவை நோக்கி சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் புனித் ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்த கன்டீரவா மைதானம் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் முண்டியடித்துக்கொண்டு மைதானத்திற்குள் செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்த அவ்வப்போது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இருப்பினும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய மாநிலத்தின் மூலைமுடுக்குகளில் இருந்து வந்த சிறுவர்கள், வாலிபர்கள், பெரியவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று புனித் ராஜ்குமார் உடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அங்கு குவிந்திருந்தவர்கள் அப்பு…. அண்ணா… என்று கண்ணீர்விட்டு கதறினர். பலர் புனித் ராஜ்குமாரின் உருவப்படங்களை கைகளில் ஏந்தியபடி வந்து அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூரு மட்டுமின்றி சாம்ராஜ்நகர் முதல் பீதர் வரை மாநிலம் முழுவதும் இரசிகர்கள் வாகனங்களில் பெங்களூரு கன்டீரவா மைதானத்தை நோக்கி வந்தனர். இதனால் கன்டீரவா மைதானத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் வாகனங்களை நிறுத்த செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி வளாகத்தில் காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர்.
இரசிகர்கள் அங்கு தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு நடைப்பயணமாக மைதானத்திற்கு வந்தனர். இரசிகர்கள் வரிசையில் வந்தபடியே இருந்தனர். கூட்டம் குறையவே இல்லை. நேற்று காலையும் மக்கள் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். அவ்வப்போது லேசான மழையும் பெய்தபடி இருந்தது. மழையைப் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று அவர்கள், புனித் ராஜ்குமார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் 1,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர். 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 19 துணை ஆணையர்கள், 50-க்கும் மேற்பட்ட உதவி ஆணையர்கள், 100-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் இந்த பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக பெங்களூருவில் எங்கும் அசம்பாவித சம்பவங்கள் நிகழவில்லை.
அமெரிக்காவில் இருந்து அவரது மகள் துருதி, விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து மற்றொரு விமானத்தில் பெங்களூரு வந்து சேர்ந்தார். அவரை பாதுகாப்புடன் கன்டீரவா மைதானத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு தனது தந்தையின் உடலைப் பார்த்து அவர் கதறி அழுதார். இது அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் தொலைக்காட்சி நேரலையில் பார்த்து கொண்டிருந்த இரசிகர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 அளவில் பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் அடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முழுஅரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது.
ஆனால், அதிகாலை ஐந்து மணிக்கே அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டே இருப்பதால் பத்தரை மணி வரை காத்திருக்கவேண்டாம் என முடிவு செய்து அதிகாலையில் அடக்கம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அங்கு தொடர்ந்து இரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.











