Uncategorized சினிமா செய்திகள்

ஹரீஷ்கல்யாண் டார்ச்சர் செய்தாரா? – ஓ மணப்பெண்ணே இயக்குநர் கார்த்திக் சுந்தர் பேட்டி

2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் பெல்லிசூப்புலு. பெரியவெற்றி பெற்ற அந்தப்படத்தில் விஜய்தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்தார். அந்தப்படத்தின் தமிழாக்கம்தான் அக்டோபர் 22 ஆம் நாள் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே.

அப்பட வெளியீட்டுக்குப் பின் அதன் இயக்குநர் கார்த்திக் சுந்தருடன் ஓர் உரையாடல்….

1. பட வெளியீட்டுக்குப் பின் வரவேற்புகள் எப்படி இருக்கின்றன?

நிறையப் பாராட்டுகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை விட ஒரிஜினல் படத்தைக் கெடுத்துவிடாமல் அப்படியே எடுத்துவிட்டீர்கள் என்று பலர் சொல்வதைக் கேட்கும்போது திருப்தியாக இருக்கிறது.

2.தமிழுக்காக என்னென்ன மாற்றங்கள் செய்தீர்கள்.?

மையக்கதையை அப்படியே வைத்துக்கொண்டு திரைக்கதிஅயில் சில மாற்றங்கள் செய்தோம். குறிப்பாக க்ளைமாக்ஸுகு முந்தைய காட்சிகளை விரிவாக்கியிருந்தோம். அவற்றைக் குறிப்பிட்டுப் பலர் பாராட்டுகிறார்கள்.

3.உங்கள் முதல்படமாக இந்த மொழிமாற்றுப்படம் ( ரீமேக்) அமைந்தது பற்றி..?

2016 இல் இந்தப்படம் பார்த்தபோதே என் நண்பன் ஹரிஷிடம் இது உனக்கு மிகப்பொருத்தமான படமாக இருக்கும் நீ இதை தமிழில் செய் என்று சொன்னேன். அப்புறம் அப்படம் பல இடங்களுக்குப் போய்விட்டு என்னிடம் வந்தது. ஏதோ ஒரு வகையில் அந்தப்படம் நம்மோடு இணைந்திருக்கிறது என்றெண்ணி அதை எடுத்துக்கொண்டேன்.

4.உங்கள் பால்ய நண்பர் ஹரீஷ்கல்யாண். அவரை இயக்கியது பற்றி..?

சில பெரிய இயக்குநர்களைத் தாண்டி இந்தப்படம் என்னை வந்தடைந்ததற்கு ஹரீஷ் என் மீது வைத்த நம்பிக்கைதான் காரணம். அவருடைய நட்புதான் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

5.படப்பிடிப்பின்போது,நான் கதாநாயகன் எனக்கு அதற்குரிய மரியாதை கொடுக்கவேண்டும் என்று ஹரீஷ் சொன்னதாகவும் அதனால் நீங்கள் மனம் வருந்தியதாகவும் சொல்லப்பட்டதே?

இது அப்பட்டமான பொய். நான் ஏற்கெனவே சொன்னமாதிரி அவர் என் மீது வைத்த நம்பிக்கையில்தான் இந்தப்படமே நடந்தது. இன்னும் சொல்லப்போனால், படப்பிடிப்புத் தளத்தில் நீங்கள் இயக்குநர் நீங்கள் சொல்கிறபடி நான் செய்வேன் என்று சொன்னார். அப்படியே செய்தார். இதுதான் உண்மை.

6.விஜய்தேவரகொண்டா போல் ஹரீஷ் கல்யாண் இல்லை என்கிற கருத்துகளும் வருகின்றனவே?

அவர் போலவே இவர் இருக்கமுடியாதே. அதனால்தான் படத்திலும் இவருடைய இயல்புக்கேற்ப காட்சிகள் அமைக்கப்பட்டன.அவற்றிற்கு நிறைய வரவேற்பு இருக்கிறது. விஜய்தேவரகொண்டா போலவே இருக்கவேண்டும் என்று எடுத்திருந்தால் சொதப்பியிருக்கும்.

7.படம் திரையரங்குகளில் வெளியாகாமல் இணையத்தில் வெளியானது உங்களுக்கு வருத்தமா?

இல்லை. என்னை நம்பி சில கோடிகளைப் போட்டிருக்கும் தயாரிப்பாளர்களுடைய பாதுகாப்புதான் முதன்மை. அதுமட்டுமின்ற ஹாட்ஸ்டாரில் வெளியானதால் படத்துக்கு மிகப்பெரிய ரீச் கிடைத்திருக்கிறது.அதனால் மகிழ்ச்சி.

8.உங்கள் குருநாதர் ஏ.எல்.விஜய் படம் பார்த்தாரா? என்ன சொன்னார்?

அவர் படம் பார்த்துவிட்டு, சரியாகச் செய்திருக்கிறாய் என்று சொன்னார். அதுவே பெரும் பாராட்டுதான்.

9.உங்கள் அத்தைமகன் நடிகர் விஜய் பார்த்தாரா?

இல்லை, அவர் பிசியாக இருக்கிறார். எனவே இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்ப்பார் என நினைக்கிறேன்.

10.அடுத்த படம் என்ன?

பேசிக் கொண்டிருக்கிரோம். விரைவில் அறிவிப்பு வரும். என்னுடைய கதையைப் படமாக்கவிருக்கிறேன்.

11.மீண்டும் ஹரிஷுடன் இணைவீர்களா?

நிச்சயம், அவரிடம் சில கதைகள் சொல்லியிருக்கிறேன். அவற்றைப் படமாக்குவோம்.

– ரவி

Related Posts