லைகா நிறுவனர் சுபாஷ்கரன் கோபம் – இயக்குநர் ஷங்கர் சொன்ன சமாதானம்
இயக்குநர் ஷங்கர் மற்றும் ராம்சரண் தேஜா முதல்முறையாக இணையும் படத்தின் பூஜை இன்று ஐதரபாத்தில் நடைபெற்றது.
இந்தப்படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. செப்டம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது.இந்த நிலையில், ஷங்கர் மற்றும் ராம்சரண் தேஜா இணையும் படத்தின் பூஜை இன்று ஐதரபாத்தில் நடைபெற்றது.
இந்த பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக ராம்சரணின் தந்தை சிரஞ்சீவி, இயக்குநர் ராஜமௌலி,இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராம்சரண் தேஜா ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. இன்று முதல் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த லைகா நிறுவனர் சுபாஷ்கரனுடன் நடந்த சந்திப்பின்போது இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு இந்தப்படத்துக்குப் போவதாக இயக்குநர் ஷங்கர் கூறியிருந்தாராம்.
அதன்படி, கமல் பங்கு பெறாத காட்சிகளின் படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்கத் திட்டமிட்டு வேலைகளை ஆரம்பித்தனராம். அந்த வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே ராம்சரண் படம் தொடங்கப்பட்டிருக்கிறது.
தன்னிடம் ஒப்புக்கொண்டதற்கு மாறாக இந்தப்படம் தொடங்கப்பட்டதால் சுபாஷ்கரன் கோபமாகிவிட்டாராம். லைகா நிறுவனத்தினர் ஷங்கரிடம் இதுபற்றிக் கேட்டபோது, இது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி, பூஜை மட்டும்தான் போடுகிறோம் படப்பிடிப்பு தாமதமாகும் என்று சமாதானம் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.











