விஷாலை துன்புறுத்திய தயாரிப்பு நிறுவனம் – தண்டம் விதித்த நீதிமன்றம்
விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியிருந்த அந்தப் படம் பிப்ரவரி 19 அன்று வெளியானது.
அப்பட வெளியீட்டின்போது பல சிக்கல்கள் எழுந்தன/
விஷால் நடித்த ‘ஆக்ஷன்’ படத்தின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் சக்ரா படத்துக்குத் தடை கோரி ட்ரைடண்ட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதேபோல் லைகா நிறுவனத்திடம் வாங்கிய பணத்துக்குப் பதில் இல்லாததால் அந்நிறுவனமும் வழக்கு தொடர்ந்தது.
அவ்வழக்குகளில், ‘சக்ரா’ வெளியீட்டுக்குத் தடை ஏதுமில்லை என்று பிப்ரவரி 18 அன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதனால், ‘சக்ரா’ படம் திட்டமிட்டபடி வெளியானது. அதேசமயம், சக்ரா படத்தின் இரண்டு வார வசூல் விவரங்கள் மற்றும் இணையத்தில் வெளியிடும் ஒப்பந்தம் ஆகியனவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அவ்வழக்கு மீண்டும் மார்ச் 5 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது என்றும் சொல்லப்பட்டிருந்தது.
அதன்பின் அவை தொடர்பாக எந்தச் செய்தியும் இல்லை.
இன்று மாலை 4 மணியளவில் விஷால் அதுதொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவு வெளீயிட்டுள்ளார். அதில்,
எப்போதும் நீதியும் உண்மையும் வெல்லும் என்ற நம்பிக்கை பலித்திருக்கிறது.
லைகா நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட எனக்கு மற்றும் சக்ரா படத்துக்கு எதிரான பொய் வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு பொய்யான வழக்கை முன்வைத்து என்னை துன்புறுத்தியதற்காக அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.











