சிம்பு பட சிக்கல் – ஆர்.கே.செல்வமணிக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
தமிழ்த்திரையுலகம் சுமுகமாகவும் பொருளாதார இழப்பைத் தவிர்க்கும் வகையில் இயங்குவதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அதற்கு முழு ஒத்துழைப்புத் தருவதாக திரு ஆர்.கே.செல்வமணி அவர்களின் தலைமையிலான நிர்வாகிகள் ஒப்புக்கொண்டார்கள்.
ஆனால், அடுத்தநாளே தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்மேளனத் தலைவர் திரு ஆர்.கே.செல்வமணி அவர்கள் தயாரிப்பாளர்களின் நல்ன்களைச் சீர்குலைக்கும் வகையில் தன்னிச்சையாகச் செயல்படுவது கண்டனத்துக்குரியது.
ஆகவே, தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் நலன்கருதியும் தமிழ்த் திரையுலகத்தைக் காப்பாற்றும் வகையிலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் 06.08.2021 அன்று நடைபெற்று கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
அவை…
* தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (ஒன் டு ஒன்) 06.08.2021 முதல், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.
* உச்ச நீதிமன்ற ஆணைப்படி தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை பணியமர்த்திக் கொண்டு, திரைப்படத்திற்கு உண்டான படப்பிடிப்பு உட்பட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம்
* தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மீறி, தொடர்ந்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை அலட்சியப்படுத்தி வரும் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் கிடையாது.
* மேற்கண்ட தீர்மானங்களை மீறி படப்பிடிப்பு நடத்துவதற்கோ மற்றும் திரைப்பட தயாரிப்பு பணிகளைச் செய்வதற்கோ எந்த அமைப்பாவது இடையூறு ஏற்படுத்தினாலோ, பணி செய்பவர்களைத் தடுத்தாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த அவசர செயற்குழுவும் கடுமையான தீர்மானங்களும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை மீறி சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பில் தொழிலாளர்கள் கலந்து கொண்டதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.











