அண்ணாத்த படப்பிடிப்பு – கொல்கத்தா செல்லும் ரஜினி
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்திசுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் அண்ணாத்த. இந்தப்படத்தில் குஷ்பு, மீனா, சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்ட இந்தப் படம், கொரோனா காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது.இப்போது தீபாவளியையொட்டி நவம்பர் 4 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்துக்கு முன்னதாக பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு.
ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.ஆனாலும் அவர் இன்னும் சில நாட்கள் நடிக்க வேண்டியிருக்கிறதாம்.
இன்னும் 20 நாட்கள் வரை இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவேண்டியிருக்கிறதாம். இந்நிலையில், ஜூலை 12 ஆம் தேதி மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. சென்னையில் ஒரு துரத்தல் (சேசிங்) காட்சியைப் படமாக்கிவிட்டு அதன்பின் கொல்கத்தா செல்லவிருக்கிறார்களாம்.
படத்தின் கதைக்களம் கொல்கத்தா என்பதால் அங்கு செல்லவிருக்கிறார்கள். ஏற்கெனவே ஐதாராபாத்தில் கொல்கத்தா போன்று அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்திவிட்டனர். இப்போது கொல்கத்தாவின் வெளிப்புறக் காட்சிகளைப் படம்பிடிக்க அங்கு செல்லவிருக்கிறார்களாம்.
கொல்கத்தா படப்பிடிப்பில் ஓரிருநாட்கள் ரஜினியும் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. அவர் அங்கு செல்ல விரும்பவில்லையெனில் சென்னையில் வைத்தே அவருடைய காட்சிகளைப் படமாக்கிவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.












