கேஜிஎஃப் 2 தமிழக உரிமையைப் பெற்றது ட்ரீம்வாரியர் நிறுவனம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ என்றழைக்கப்படும் யாஷ் நடிப்பில் உருவாகி கன்னடத்திரையுலகில் வெளியான படம் ‘கேஜிஎஃப்: சேப்டர்1’. இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் வெளீயிடப்பட்டது.
இப்படத்தின் வசூல் தென்னிந்தியத் திரையுலக வட்டாரங்களை ஆச்சரியப்பட வைத்தது. இப்படத்தின் உருவாக்கம், அனல் பறக்கும் வசனங்கள், சண்டைக் காட்சிகள் ஆகியவை திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றது. இதனால் கேஜிஎஃப் 2 எப்போது வரும் என இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த ‘கேஜிஎஃப்: சேப்டர்2’ல் நாயகன் யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் போன்ற இந்தித் திரையுலகப் பிரபலங்களும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நடிகர் பிரகாஷ் ராஜும் இப்படத்தில் நடித்திருக்கிறார்.
யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியான ‘கேஜிஎஃப்: சேப்டர்2’ படத்தின் டீஸர் 200 மில்லியன்களுக்கு மேல் பார்வையிடல்களைப் பெற்றுள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் இதுவொரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகை எடுத்துக்கொண்டால் இந்திப் படங்களுக்குதான் இந்தியா முழுமைக்கும் இரசிகர்கள் இருந்தனர். ஆனால், இதனை மாற்றிக்காட்டிய முதல் தென்னிந்தியப் படம் ‘பாகுபலி’. இப்படத்திற்குப் பிறகு மீண்டும் அதே போன்றதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘கேஜிஎஃப்: சேப்டர்2’.
ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் தமிழக வெளியீட்டு உரிமையை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.











