ஈழத்தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் ஜெகமே தந்திரம்? – படத்தில் பணியாற்றிய ஈழத்தமிழரின் கருத்தென்ன?
ஜூன் 3 ஆம் தேதி அமேசான் இணையத்தில் வெளியான தி ஃபேமிலிமேன் 2 தொடரில், தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் ஆகியோரை இழிவுபடுத்தும் விதமாகக் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றிருந்தன. அதனால் அத்தொடருக்கெதிராக தமிழகம் மற்றும் உலகத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு அத்தொடரைத் தடை செய்யவும் அதில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனையும் கொடுக்கவேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இதுஒருபுறமிருக்க ஜூன் 18 ஆம் தேதி இணையத்தில் வெளியானது ஜெகமே தந்திரம் படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கும் படம். இந்தப்படத்திலும் ஈழத்தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வண்ணம் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன என்று சொல்லி அப்படக் குழுவினருக்குக் கடும் கண்டனங்கள் குவிந்தன.
அப்படத்தின் விமர்சனம் ஒன்றில், ஈழத்தில் நடந்த போர் காரணமாக, அகதிகளாகும் மக்கள், நாடுநாடாகத் திரியும் அவல நிலைகளை படத்தின் கருவாக வைத்திருக்கிறார்கள்.
ஆனால், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலத்தான் இருக்கிறது. கமர்ஷியல் கேங்க்ஸ்டர் கதைக்குள் தமிழீழப் பிரச்னையை பேசியது உணர்வுப்பூர்வமாக இல்லை.
ஈழத் தமிழர்கள் வெளிநாடுகளில் கேங்க்ஸ்டராக இருக்கிறார்கள் என்பது போல நெகட்டிவாக படம் முழுக்க காட்சிப்படுத்தியிருப்பதும், அதற்கு ஒரே சீனில் நியாப்படுத்துவதெல்லாம் நியாயமே இல்லை. இத்தனைக்கும் திரைக்கதை உதவி என சோமீதரன் என்கிற ஈழத்தமிழர் பெயர்தான் இருக்கிறது.துரோகம் நம் இனத்தின் சாபம்.
என்று சொல்லப்பட்டிருந்தது.
அப்படம் குறித்த இன்னொரு பதிவில்..
இந்தப் படம் உலக நாடுகள் முழுக்க இப்போது வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் ஈழத் தமிழர்கள் என்றால் எப்போதும் அழுது புலம்பித் திரிகிறவர்கள், அல்லது ஆயுதத்தோடு கொலை வெறியாகி அலைகிறவர்கள். புலம் பெயர்ந்த நாடுகள் அனைத்திலும் அண்டர்கிரவுண்ட் வேலைகளில் ஈடுபடுகிறவர்கள் என்பதாகக் காட்டுகிறது படம்.
அது மட்டுமல்லாமல் தேசியத் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு இருப்பது போன்றும், அவருக்காக பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் ஆயுதம் சேகரித்து வருவதாகவும் சித்தரிக்கிறது.
சொந்த மண்ணில் எல்லாவற்றையும் இழந்து விட்டு உயிரை மட்டும் எடுத்துக் கொண்டு பல நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்களை மேலும் சிக்கலில் மாட்டிவிடுகிற மட்டமான கற்பனை இது. இது அந்த மக்களுக்கு மேலும் சிக்கலையே ஏற்படுத்தும்.
கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட அரைகுறை இயக்குநர்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம்… உங்களுக்கு என்ன வருமோ அதைச் செய்யுங்கள், ஈழத் தமிழர்களை விட்டு விடுங்கள்.
என்று சொல்லப்பட்டிருந்தது.
இதேவேளையில்,
1. Australian Tamil Congress (ATC))
2. British Tamils Forum (BTF))
3. Irish Tamils Forum (ITF))
4. La Maison du Tamil Eelam (MTE),
5.Norwegian Council of Eelam Tamils (NCET),
6.National Council of Canadian Tamils (NCCT),
7.Solidarity Group for Peace and Justice (SGPJ – South Africa) மற்றும்
8.United States Tamil Action Group (USTAG)
ஆகிய 8 அமைப்புகள் தி ஃபேமிலிமேன் 2 தொடர் தொடர்பாக, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்கள்.
அதில்…
‘தி ஃபேமிலி மேன் 2’ வலைத் தொடர் “ஒரு கற்பனையான படைப்பு” என்று தயாரிப்பாளர்கள் கூறியிருந்தாலும், ‘ஈழத் தமிழர்கள்’, ‘பருத்தித்துறை’, ‘ஈழம்’ மற்றும் ‘வட இலங்கை’ ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை, காட்சிகள் ஈழம் போருக்கு மிகவும் ஒத்திருக்கின்றமை ஆனது ஈழத் தமிழர்களை மோசமான முறையில் காட்ட முனையும் நன்கு திட்டமிடப்பட்ட செயலாகவே இது தெரிகின்றது.
“ஈழத் தமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று இந்தத் தொடர், பிரச்சாரம் செய்கிறது. மாறாக, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இன அழிப்பு போன்ற அநீதிக்கு எதிராக நாங்கள் உலக நாட்டு சட்டங்களின்படி போராடி வருகிறோம். ஆனால் இன்றும் விடுதலை பற்றிய எங்கள் எண்ணங்களை அடக்குவதற்கான நோக்கத்துடன் வேலைகள் நடைபெற்று வருகின்றன .
விடுதலைக்காகப் போராடும் பெண்களின் வாழ்க்கை முறை தவறாகவும், கீழ்த்தரமாகவும், விசமத்தனமாகவும் புனையப்பட்டிருக்கிறது. காரியம் நடக்க வேண்டி தமிழ் பெண்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்ற அச்சுறுத்தலை வேறு அது உலக மக்களுக்கு விதைக்கிறது.
தமிழக மக்கள் எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள். “திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் மிகவும் ஆதரவளித்துள்ளனர். ஈழத் தமிழர்களை மோசமாக காண்பிக்கும் இது போன்ற திரைப்படங்களைத் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும், இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்றும், தயாரிக்க வேண்டாம் என்றும் ஒரு சுற்றறிக்கையை நடிகர் சங்கம் அல்லது தயாரிப்பாளர் சங்கம் வெளியிட வேண்டும்,
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்ப்படைப்பாளிகளுக்கு ஈழத்தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்திருக்கின்றன. அதேநேரம், ஜெகமே தந்திரம் திரைப்படத்தில் திரைக்கதை உதவி செய்திருப்பவர் சோமீதரன் எனும் ஈழத்தமிழர்தான். அவரைக் கேட்கமாட்டார்களா? என்கிற கேள்விகள் எழுந்தன.
பல ஆவணப்படங்களை இயக்கியுள்ள அவர் திரைக்கதையில் பணியாற்றிய போதும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக அந்தப்படம் அமைந்திருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன.
இதுகுறித்து அவரிடம் பேசினோம்.
ஜகமே தந்திரம் படத்தில் ஈழத்தமிழர்களைக் கொச்சைப்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. அதன் திரைக்கதையில் ஈழத்தமிழரான உங்கள் பங்கும் இருக்கிறது. எனவே, இந்தக் குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து என்ன? என்பதைக் கூறுங்கள் எனக் கேட்டதற்கு அவர் கூறிய பதில்….
படத்தில் பணியாற்றியிருப்பதால் நான் கருத்துச் சொல்வது சரியாகாது. படம் முக்கியமான அரசியலைப் பேசியிருக்கிறது அதனை விட்டுவிட்டு வேறு திசையில் சர்ச்சையாகிறது. ஏதிலிகளின் பாடுகளைப் பேசியிருக்கிற ஒரு பொப்புயூளர் தமிழ் படமாகத்தான் பார்க்கிறேன் என்று சொன்னார்.
எல்லோரும் இப்படம் ஈழத்தமிழர்களைக் கொச்சைப்படுத்துகிறது என்று சொல்லி வரும்போது படத்தில் பணியாற்றிய ஓர் ஈழத்தமிழரே அப்படத்துக்கு ஆதரவாகக் கருத்துச் சொல்வது வியப்பளிக்கிறது.
– அன்பன்











