இலங்கைக்குப் போகலாமா? – மணிரத்னம் யோசனை
கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம்பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்தது.
அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல் காரணமாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த இயலவில்லை. அதனால், ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் படப்பிடிப்புத் தளத்தில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டனர்.அங்கும் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டன.
அதனால் பொன்னியின் செல்வன் வேலைகளும் நின்று போயின.
இப்போது மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டு வருகிறார்கள். அதற்காக இலங்கை சென்று படப்பிடிப்பை நடத்தலாம் என்று மணிரத்னம் திட்டமிடுகிறாராம்.
இதற்காக அங்கு படப்பிடிப்பு நடந்தால் ஆகும் செலவு குறித்த விவரங்களைச் சேகரிக்கச் சொல்லியிருக்கிறாராம். அது இவர்கள் கணக்குக்குள் அடங்கினால் அங்கு சென்று படப்பிடிப்பு நடத்துவார்கள் இல்லையெனில் இந்தியாவுக்குள்ளேயே படப்பிடிப்பை முடித்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறாராம்.











