சிவகார்த்திகேயனின் டாக்டர் வியாபாரத்தில் சுணக்கம் ஏன்?
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.பல மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. மார்ச் 26 ஆம் தேதி ‘டாக்டர்’ வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் காரணமாக அந்தத் தேதியில் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது.
அதன்பின், ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் அப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிடத் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்டது.
ஆனால் பல வாரங்களாகியும் அம்முயற்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லையாம்.
அதற்குக் காரணம், படக்குழுவினர் சொல்லும் விலைதான் என்கிறார்கள்.
படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் கேட்கும் தொகை சுமார் அறுபது கோடி என்கிறார்கள்.
இதனாலேயே ஒன்றுக்கு மூன்று நிறுவனங்களை அணுகியும் டாக்டர் பட வியாபாரம் நடக்கவில்லை என்கிறார்கள்.











