சினிமா செய்திகள்

நடிகர் விவேக் மறைந்தார் – திரையுலகம் கண்ணீர்

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டில் இருந்தபோது அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தார் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் வீட்டிலிருந்து வடபழனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ரத்த நாள அடைப்பைக் கண்டறியும் ஆஞ்சியோ சிகிச்சையும், இதயச் செயல்பாட்டை அதிகரிக்க, இயல்பு நிலைக்குக் கொண்டுவர எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பபட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் மீண்டும் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும், அவரைக் காப்பாற்ற முடியவி்ல்லை. அவரின் உயிர் பிரிந்தது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக்.அவருக்கு வயது 59.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைப் பூர்வீகமாகக் கொண்டவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த நடிகர் விவேக் 1990 களில் இயக்குநர் பாலச்சந்தரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டார். நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்ட நடிகர் விவேக். சிறந்த மேடைப் பேச்சாளர்.

திரைப்படங்களை நகைச்சுவையாகக் கொண்டு செல்லாமல் சமூக அக்கறை உள்ள கருத்துகளை நகைச்சுவை மூலம் மக்களிடையே விவேக் கொண்டு சென்றார்.

அவரது சமூக சீர்திருத்தக் கருத்துகளால் ’சின்ன கலைவாணர்’ என்று அழைக்கப்பட்டார். சினிமாவைத் தாண்டி சமூக அக்கறை உள்ள விசயங்களைக் கையிலெடுத்துச் செயல்படுத்தினார்.

தமிழக அரசின் டெங்கு விழிப்புணர்வு, கொரோனா விழிப்புணர்வு, கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்குப் பிரச்சாரம் செய்தார் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 இலட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.

திடுமென அவர் மறைந்ததால் திரையுலகமும் இரசிகர்களும் பேரரதிர்ச்சி அடைந்து க்ண்ணீர் வடிக்கின்றனர்.

Related Posts