இயக்குநர் வெற்றிமாறனின் அரிய முன்னெடுப்பு
திரைப்படக் கல்லூரிகள் மற்றும் திரைப்படப் பயிற்சிகள் திரைப்பட ஆர்வம் கொண்ட அனைவருக்குமானது என்கிற நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறது.
குறிப்பிட்ட சமூகம் அல்லது குறிப்பிட்ட கருத்தியலாளர்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் வாய்ப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கலையார்வம் உள்ள அனைவரையும் அரவணைத்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து வழிகாட்டும் வகையில் திரை – பண்பாடு ஆய்வகம் எனும் பயிலகத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
இப்பயிலகத்தின் வழிகாட்டியாக பேராசிரியர் ராஜநாயகம் இருக்கிறார். அவருடைய மேற்பார்வையில் வகுப்புகள்,பயிலரங்குகள், உரையாடல்கள் உட்பட அனைத்தும் நடக்கும்.
● கல்வித் தகுதி: ஏதேனும் (ஊடகமல்லாத) பட்டம் பெற்றவர்கள்.
● வயது எல்லை: 21 – 25
● புவி-கலாச்சார பின்னணி: தமிழ் பேசும் + தமிழ் நாட்டிலிருந்து (முன்னுரிமை ஒரு மாவட்டத்திற்கு ஒன்று)
● சமூக-பொருளாதார விருப்பம்: சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள்; முதல் தலைமுறைப் பட்டதாரிகள் .
இந்தத் தகுதி உள்ள திரைப்பட ஆர்வலர்கள் விண்ணப்பித்தால், அவர்களைப் பற்றி அறிந்து, தொடக்கத்தில் எழுத்துத் தேர்வு வைத்து,அவர்களுடைய வாசிப்பு, கற்கும் ஆர்வம் ஆகியனவற்றைத் தெரிந்து, எந்தத்துறையில் ஆர்வம் என்பதை உணர்ந்து இவை நான்கையும் கடந்தோர் வீட்டுக்கே சென்று அவர்களின் வாழ்நிலை மற்றும் பெற்றோர் மனநிலை அறிந்து அதன்பின் அவர்கள் வகுப்பில் சேர்க்கப்படுவார்கள்.
ஓராண்டு நீடிக்கும் இந்தப் பயிற்சி வகுப்புகளுக்கு நேரம் காலம் கிடையாது. இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கக் கூடிய உண்டு உறைவிடப்பள்ளியாக இது திகழும்.
சர்வதேசத் தரத்தில் செயல்படவிருக்கும் இப்பயிலகம் சென்னையில் விரைவில் தொடங்கவிருக்கிறது.
மிகமுக்கியச் செய்தி, இங்கு பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்படுவோர் எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.உணவு, தங்குமிடம், பயிற்சிகள் ஆகிய அனைத்தையும் நிர்வாகமே செய்துதரும்.
IIFC -International Institute of Film and Culture – சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் என்கிற பெயரில் இயங்கவிருக்கும் இப்பயிலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.iifcinstitute.com/.
இதன் மூலம் ஆர்வமுள்ளோர் இதில் இணையலாம். ஆண்டுக்கு அதிகபட்சம் 40 பேரைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுக்கவிருக்கிறார்கள்.
இதன் அறிமுகவிழா சென்னை சாலிகிராமத்திலுள்ள பாலுமகேந்திரா அரங்கில் நேற்று ( ஏப்ரல் 14,2021) நடந்தது.
நிகழ்வில், இயக்குநர் வெற்றிமாறன், பேராசிரியர் ராஜநாயகம், இயக்குநர் வெற்றிதுரைசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டில் தற்போது காட்டாற்று வெள்ளமாகப் பாயும் ஒற்றைகளுக்கு எதிரான முரசறைவாக இப்பயிலகம் அமையும் என நம்பலாம்.











