சினிமா செய்திகள்

கண்ணகியாக நடிக்கிறார் கங்கணா – விவரங்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தலைவி. இந்தத் திரைப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.எம்.ஜி.ஆராக நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

‘தலைவி’ திரைப்படத்தை கடந்த வருடமே வெளியிடத் திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா தொற்று காரணத்தால் படத்தின் வெளீயீடு தள்ளிப்போனது என்றார்கள். இந்நிலையில் அண்மையில் இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியானது. அப்போதே, படத்தின் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 23 என அறிவித்தனர்.

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை என்கிற காரணம் சொல்லி ‘தலைவி’ திரைப்படத்தின் வெளீயீட்டுத் தேதி தள்ளிப் போவதாக அறிவித்துள்ளனர்.

எப்போது வெளீயீடு என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.

ஆனாலும், அடுத்த படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகளில் இயக்குநர் விஜய் இறங்கிவிட்டாராம்.

ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையைப் படமாக்கியபோது பாகுபலி எழுத்தாளரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான விஜயேந்திரபிரசாத் உடன் இயக்குநர் விஜய்க்கு நெருக்கம் உண்டானது.

அதன்விளைவு தமிழின் புகழ்பெற்ற இலக்கியமான சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்த படத்துக்கான திரைக்கதை எழுத விஜயேந்திரபிரசாத்திடம் கேட்டிருக்கிறாராம் இயக்குநர் விஜய்.

அவரும் ஒப்புக்கொண்டு எழுதத் தொடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதற்கடுத்து இப்படத்தில் கண்ணகியாக நடிக்க கங்கணா ரனாவததைக் கேட்டிருக்கிறார்கள். அவரும் சம்மதித்திருக்கிறாராம்.

தலைவி படம் வெளியானபின்பு இப்படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts