ஆர்.ஜே.பாலாஜி பட ரிலீஸ் தேதி அறிவிக்காதது ஏன்?
ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’.
இந்தப்படத்தை ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.
இந்தப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இந்தப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் மெர்வின் இசையமைக்கிறார்.
சத்யராஜ், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு நேற்று அறிவித்துள்ளது.
மாதம் அறிவித்தவர்கள் தேதி அறிவிக்கவில்லை.
ஏன்?
இப்போதெல்லாம் திரையரங்க வெளியீட்டுக்கு முன்பாகவே, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் இணைய ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றை நல்ல விலைக்கு விற்றுவிட வேண்டும் என எல்லாத் தயாரிப்பாளர்களும் நினைக்கிறார்கள்.
இப்படத்தயாரிப்பாளரும் விதிவிலக்கன்று.
இந்தப்படத்தை வாங்க இரண்டு பெரிய நிறுவனங்கள் முன்வந்தனவாம். ஒரு நிறுவனம் சுமார் 15 கோடிக்கு இந்தப்படத்தை வாங்கிக்கொள்கிறோம் என்று சொன்னதாம்.
இந்தப்படத்துக்குப் பதினைந்து கோடியா? என்று மற்றவர்கள் ஆச்சரியப்பட, தயாரிப்பாளரோ இன்னொரு நிறுவனத்திடம் இதைச்சொல்லி, பதினேழு என்றால் உங்களுக்குத் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.
இந்தப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிவடைந்து வியாபார ஒப்பந்தம் போட்டுவிட்டால் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்கிறார்கள்.











