சுசீந்திரன் படம் – பெயர் மாற்ற அறிவிப்பும் அதன் பின்னால் உள்ள கதையும்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் ‘சிவ சிவா’.ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், காளிவெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், முக்தார்கான் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் பெயர் இன்று மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது…..
ஜெய் நடிப்பில் ’சிவ சிவா’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். விரைவில் திரைப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இந்தத் திரைப்படத்தைப் பார்த்த என் நண்பர்கள் வெகுவாக என்னையும் என் படக்குழுவினரையும் பாராட்டினார்கள். அவர்கள் என்னிடம் ஒரு வேண்டுகோளை முன் வைத்தார்கள்.
இத்திரைப்படம் கிராமம் சார்ந்த திரைப்படமாக இருப்பதால் ’சிவ சிவா’ என்ற பெயருக்கு மாற்றாக மண்சார்ந்த கிராமத்துத் தலைப்பு இருந்தால் இன்னும் இத்திரைப்படத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கும் என்று கூறினார்கள்.
அவர்கள் கூறிய ஆலோசனையில் எனக்கு உடன்பாடு ஏற்பட்டதால் தயாரிப்பாளர் அவர்களின் சம்மதத்துடன் என் உதவியாளர்களுடன் ஆலோசித்து ’சிவ சிவா’ என்ற தலைப்பை மாற்றி ’வீரபாண்டியபுரம்’ என்ற தலைப்பைத் தேர்வு செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
படத்தைப் பார்த்துவிட்டு நண்பர்கள் சொன்ன ஆலோசனையின்பேரில் பெயர் மாற்றம் செய்ததாக அவர் கூறியிருக்கிறார். ஆனால் உண்மை வேறு என்கிறார்கள் விசயமறிந்தவர்கள்.
ஏற்கெனவே தமிழில் சிவசிவா என்றொரு படம் எடுக்கப்பட்டிருக்கிறதாம். இப்படத்தின் பெயரை அறிவித்தவுடன் அந்தப்படக்குழுவினர், பெயர் பதிவு உள்ளிட்ட ஆதாரங்களுடன் வந்துவிட்டார்களாம். அவர்களிடம், இந்தப்பெயரை விட்டுக்கொடுங்கள் எனக் கோரிக்கை வைத்தாராம் சுசீந்திரன்.
பலமுறை பேசியும் அவர்கள் விட்டுத்தர முடியாது என்று மறுத்துவிட்டார்களாம். அதன்பின் வேறுவழியின்றி பெயர்மாற்றம் செய்துள்ளார் என்கிறார்கள்.
சம்பந்தப்பட்டவர்களுகே இது வெளிச்சம்.