ஈஸ்வரன் படத்துக்கு தியேட்டர் கிடைக்காமல் செய்த மாஸ்டர் – விநியோகஸ்தரின் குமுறல்
2021 பொங்கல் திருநாளையொட்டி விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகின.
இவற்றில் ஈஸ்வரன் படத்தை வெளியிடுவதற்கு முன்பு, மாஸ்டர் திரைப்படக்குழுவினர் ஈஸ்வரன் படத்துக்குத் திரையரங்குகள் ஒதுக்கவிடாமல் செய்கின்றனர், சிம்புவுக்கு தயாரிப்பாளர் சம்பளமே தரவில்லை, மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகார் அடிப்படையில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் முட்டுக்கட்டை என்பது உட்பட ஏராளமான சிக்கல்கள்.
அவற்றையெல்லாம் தாண்டி படம் வெளியாகிவிட்டது. நான்கு நாட்கள் கழித்தும் அப்படம் குறித்த சர்ச்சைகள் தொடர்கின்றன.
இப்படத்தை மாதவ்மீடியா சார்பில் பாலாஜிகப்பா என்பவர் தயாரித்திருந்தார். அவரிடம் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை 7ஜி சிவா பெற்றிருந்தார்.
அதனடிப்படையில் 7ஜி சிவாவிடம் செங்கல்பட்டு பகுதி விநியோக உரிமையை பிரபல விநியோகஸ்தர் காளியப்பன் பெற்றிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் செங்கல்பட்டு விநியோக உரிமை தயாரிப்பாளர் டிரைடெண்ட் ரவிக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது.
இந்த மாற்றம் எப்படி நடந்தது? என்பது பற்றி விநியோகஸ்தர் காளியப்பன் மனம் குமுறி ஒரு ஒலிப்பதிவை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம்…..
நான் காளியப்பன் பேசுகிறேன், நான் விநியோகஸ்தராகவும் திரையரங்கு உரிமையாளராகவும் இருக்கிறேன்.1975 இல் கிருஷ்ணவேணி தியேட்டரில் டிசியாக வந்து சேர்ந்தேன்.அதன்பின் கபாலி தியேட்டரில் ஆபரேட்டரா வேலை செய்தேன்.அதன்பின் விநியோகஸ்தரின் பிரதிநிதி வேலை செய்தேன்.
அதன்பின் தேர்ட் பார்ட்டியாக படங்கள் எடுத்தேன்.அதன்பின் சின்ன மாப்ளே, வால்டர் வெற்றிவேல் ஆகிய படங்களை பார்ட்னருடன் சேர்ந்து ரிலீஸ் செய்தேன். அப்புறம்சிட்டியில் ஷிப்டிங் ரிலீஸ் செய்தேன்.
அதன்பின் காரப்பாக்கம் அரவிந்த் தியேட்டர் உட்பட ஐந்து தியேட்டர்களை லீசுக்கு எடுத்து நடத்திக்கிட்டிருக்கேன்.பிகில் படம் மதுரை செங்கல்பட்டு ஏரியா விநியோகம் செய்தேன்.
போனவருசம் பொங்கலுக்கு தர்பார், பட்டாஸ் படங்கள் பண்ணியிருக்கேன்.
இப்படி ஏராளமான படங்கள் விநியோகம் செய்திருக்கிறேன். இதுவரைக்கும் எந்தச் சிக்கலும் இல்லாமல் வியாபாரம் பண்ணியிருக்கேன்.
மாஸ்டர் படம் செங்கல்பட்டு ஏரியாவுக்கு விலை பேசினோம். உங்களுக்குத்தான் படம் என்று சொன்ன தயாரிப்பாளர் லலித்குமார் கடைசிநேரத்தில் படூர் ரமேஷுக்குக் கொடுத்துவிட்டார்.
அதன்பின் ஈஸ்வரன் பட விநியோகத்துக்கு என்னை 7ஜி சிவா அணுகினார். வியாபார விசயத்தில் அவர் சரியாக இருக்கமாட்டார் என்பதால் அப்போதே உன்னிடம் வியாபாரம் செய்யமாட்டேன் என மறுத்தேன். ஆனால் என் தம்பி கிருஷ்ணன் வற்புறுத்தலால் அந்தப்படம் விநியோகம் செய்ய ஒப்புக்கொண்டேன்.
நான் ஈஸ்வரன் படத்தை வாங்கியவுடன், ஒரு தியேட்ட்ர் கூட ஈஸ்வரனுக்குக் கொடுக்கக்கூடாது எனச் சொல்லி பத்து பெரிய ஊர்களில் ஈஸ்வரனுக்கு ஒரு தியேட்டர் கூடக் கிடைக்காமல் லாக் செய்துவிட்டார் படூர்ரமேஷ்.ஒரு ஊரில் 5 தியேட்டர் இருந்தால் ஐந்திலும் மாஸ்டர்தான் போடணும் என்று லாக் செய்துவிட்டார்.
நான், திருப்பூர் சுப்பிரமணி அண்ணன், எஸ் பிக்சர்ஸ் சீனு, அழகர், ரோகிணி பன்னீர்செல்வம் ஆகியோரிடம் சொன்னேன்.ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை.
தியேட்டர் கிடைக்காத விவரத்தை 7ஜிசிவாவிடம் சொன்னோம், நீங்கள் தியேட்டர் எடுங்கள் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி பணம் வாங்கிக் கொண்டு போனார். அதன்பின் பட போஸ்டர், வினைல் ஆகியனவற்றிற்கும் பணம் கொடுத்து வாங்கி தியேட்டர்களுக்கு அனுப்பியாச்சு.
அதற்குப் பிறகு செங்கல்பட்டு ஏரியாவுக்கு படூர் ரமேஷ் தியேட்டர் போடுறார் என்று சொன்னாங்க. என்ன விவரம்னு கேட்டா, டிரைடெண்ட் ரவி புரொடியூசர் கிட்ட படம் வாங்கிட்டாருன்னு சொன்னாங்க.
நான் உடனே ரவியிடம் பேசினேன், நான் அட்வான்ஸ் கொடுத்திருக்கேன்னு சொன்னேன், அவரும் உங்க என் ஓசி இல்லாம நான் பணம் கொடுக்கமாட்டேன் படம் வாங்க மாட்டேன்னு சொன்னார்.
ஆனால் சொன்னபடி யாருமே நடக்கவில்லை.
அப்புறம், 7ஜி சிவாகிட்ட, நீங்க யாருக்கு வேணாலும் படத்த கொடுங்க, நாங்க அக்ரிமெண்ட் போட்ட தியேட்டர்கள ஹானர் பண்ணுங்கன்னு கேட்டோம்.சரின்னு சொன்னாங்க, ஆனா சொன்னபடி நடக்கல.
படம் ரிலீஸாகி நாலு நாள் ஆகியும் எனக்கு பணம் செட்டில் பண்ணல. பணபலம் ஆள்பலம் எல்லாம் பயன்படுத்தி படம் வாங்கினவனுக்கு உண்மையா இல்லாம கடைசி நேரத்துல வேறொருத்தருக்குக் கொடுத்திருக்காங்க, இது எந்த வகைல நியாயம்?
இதுக்கு முன்னாடி 7ஜி சிவாவோடு செய்த வியாபாரங்கள்ல பல கோடி நட்டம் ஆனாலும் நான் பேசியபடி நடந்துருக்கேன்.நம்மால ஒரு படம் பாதிக்கப்படக்கூடாது ன்னு கவனமா இருப்பேன்.
இந்தமுறை என்னைப் படம் போடவிடாமல் தியேட்டர்களை லாக் செய்துவிட்டு அப்படிச் செய்தவரிடமே படத்தைக் கொடுத்திருக்கிறாங்க. இது என்ன நியாயம்?
இனி எந்த அடிப்படையில 7ஜி சிவாகிட்ட நம்பி வியாபாரம் செய்யமுடியும்?
பிகிலும் கைதியும் ஒண்ணா ரிலீசாகும் போது நான் பிகில் போட்ட சிங்கிள் தியேட்டர்ல கூட கைதிக்கு ஒரு ஷோ விட்டுக்கொடுத்தேன். நான் சினிமா நேசிச்சு வேலை செய்யறேன்.சினிமாவுலதான் பணத்த விட்டுகிட்டிருக்கேன்.
அப்படிப்பட்ட என்னை பொங்கலும் அதுவுமா மன உளைச்சலுக்கு ஆளாக்கிட்டாங்க. அதனாலதான் இந்தப்பதிவ போடுறேன்.
தயவுசெய்து இனிமே 7ஜி சிவாகிட்ட வியாபாரம் செய்யும்போது ஸ்டாம்ப் பேப்பர் அக்ரிமெண்ட் மற்றும் புரொடியூசர் லெட்டர் இல்லாம வியாபாரம் செய்யாதீங்க. என் அனுபவத்துல இதச் சொல்றேன்.
படூர் ரமேஷுக்கும் எனக்கும் பாகுபலி படம் போட்டதுல மனஸ்தாபம். அத வச்சுகிட்டு இப்ப நான் மாஸ்டர் வாங்கறதயும் கெடுத்தார், நான் வாங்கிய ஈஸ்வரனையும் பறித்துக் கொண்டார். அதுமட்டுமில்ல தமிழ்நாட்டுலயே என்னோட ஐந்து தியேட்ட்ர்களில் பொங்கலுக்கு எந்தப்படமும் இல்லை.
இதை எல்லோருக்கும் தெரியப்படுத்தவே இந்தப்பதிவு.
இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.











