சினிமா செய்திகள்

எம்.ராஜேஷ் சந்தானம் கூட்டணி முறிந்தது

எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகராக கதாநாயகர்களுக்கு இணையாக நடித்திருந்தார் சந்தானம்.

கதாநாயகனுக்குச் சமமாக சந்தானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த எம்.ராஜேஷ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்பட்டது.

சந்தானத்திடம் முழுக் கதையையும் கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தைத் தவிர என்னுடைய எல்லாப் படங்களிலும் சந்தானம் நடித்திருக்கிறார். இப்போது அவரை நாயகனாக வைத்து இயக்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று இயக்குநர் எம்.ராஜேஷும் சொல்லியிருந்தார்.

இப்போது அந்தக் கூட்டணி முறிந்துவிட்டதாம். திரைக்கதை மற்றும் சம்பள விசயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்தக் கூட்டணி பிரிந்துள்ளது என்கிறார்கள்.

இப்போது அதே கதையில் சந்தானத்துக்குப் பதிலாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts