யானை – திரைப்பட விமர்சனம்
குடும்ப உறவுகள் அவை தொடர்பான உணர்வுகள் ஆகியன அழியாவரம் பெற்றவை. இளைஞர், பெரியவர்,சிறியவர் என எல்லோரையும் தொடக்கூடியவை. அவற்றைத் தன்னுடைய எல்லாப்படங்களிலும் கொண்டுவரும் இயக்குநர் ஹரி, யானை படத்திலும் அதைத் தொடர்ந்திருக்கிறார்.
பெரிய பணக்காரக் குடும்பம் அருண்விஜய்யுடையது. அப்பா, அம்மா, அப்பாவின் முதல்மனைவிக்குப் பிறந்த மூன்று சகோதரர்கள் அவர்கள் மனைவிகள் அவர்களுடைய குழந்தைகள் என ஏராளமானோர் இருக்கும் அக்குடும்பத்துக்கு உள்ளும் புறமும் பல சோதனைகள்.
அவற்றை ஒற்றை ஆளாகத் தாங்கிப் போராடும் யானை பலம் கொண்டவராக அருண்விஜய்.
இந்த வேடத்துக்காக உடலை இறுக்கி மீசையை முறுக்கி விடைத்து நிற்கிறார் அருண்விஜய். அண்ணன் குழந்தைகளிடம் பாசம் பிரியாபவானிசங்கரிடம் காதல் என இளகி நிற்குமிடங்களிலும் உயர்ந்து நிற்கிறார்.
அரிசிஆலையில் நடக்கும் ஒரு பெரிய சண்டைக்காட்சியில் அவ்வளவு சக்தியை வெளிப்படுத்தி ஓர் அரக்கன்போல் அடித்துத் துவம்சம் செய்யும் காட்சியில் பிரமிக்கவைத்திருக்கிறார். அந்தச் சண்டையில் சாதிவெறி பிடித்தவர்களைத் துவைத்து எடுப்பது கூடுதல் சிறப்பு.
நாயகி பிரியாபவானிசங்கர் அறிமுகக்காட்சியே அழகு. தொடர்ந்தும் அவர் வருகிற காட்சிகளும் பாடல்களும் நன்று.
சமுத்திரக்கனி, போஸ்வெங்கட், சஞ்சீவ், ஐஸ்வர்யா, அம்முஅபிராமி, ராஜேஷ், ராதிகா, வ.ஐ.ச.ஜெயபாலன், கேஜிஎஃப் புகழ் ராமச்சந்திரராஜு,தலைவாசல் விஜய் உட்பட ஏராளமான நடிகர்கள் இருக்கிறார்கள்.
நகைச்சுவைக்காக யோகிபாபு, இமான் அண்ணாச்சி ஆகியோர் இருக்கிறார்கள். அங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள்.
கோபிநாத்தின் ஒளிப்பதிவில் படத்தின் வேகம் தெரிகிறது. பாடல்காட்சிகள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.
ஜீ.வி.பிரகாஷின் இசையில் ஏலம்மா ஏலே, போதைய விட்டு வாலே உள்ளிட்ட எல்லாப்பாடல்களும் கேட்கும் இரகம். பின்னணி இசையும் ஹரியின் வேகத்துக்கு ஈடுகொடுத்திருக்கிறது.
கதை புதிதில்லை திரைக்கதையிலும் புதுமையில்லை என்பது படத்தின் பலவீனம்.
பெரியவர்களுக்கு அடங்கி நடக்கவேண்டும் பெற்றோரை மதித்து நடக்கவேண்டும் சாதி என்பது தேவையற்ற ஆணி, பெண் பிள்ளைகள் தெய்வம் உள்ளிட்ட பல நல்லசெய்திகளைப் படம் முழுக்கச் சொல்கிறார் இயக்குநர் ஹரி.
குடும்பத்துடன் பார்க்கலாம்.











