விஸ்வாசம் – திரைப்பட விமர்சனம்
அரிசி ஆலை வைத்துக்கொண்டு வசதியாக இருக்கும் அஜீத்துக்கு ஊரில் நிறைய சொந்தங்கள். அவர்களுக்கெல்லாம் அவர்தான் தலைவர். அவர் நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம் என்று ஊரில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார்.
அந்த ஊருக்கு மருத்துவ முகாம் அமைக்க வரும் நயன்தாராவுக்கு அவர் மேல் காதல் அதன்பின் திருமணம் அழகான பெண் குழந்தை.
இப்படியே போனால் சுவாரசியமாக இருக்காதே, அதனால் கணவன் மனைவிக்குள் திடீர் பிரிவு, மீண்டும் மனைவியைப் பார்க்கப்போகிற இடத்தில் அதிர்ச்சி கலந்த ஆபத்து. அதை அஜீத் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் படம்.
அஜீத் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கும் வண்ணம் தொடக்கத்திலிருந்தே அவர் உடலை அங்குலம் அங்குலமாகக் காட்டுகிறார்கள். அவரும் அதற்கேற்ப உற்சாகமாக நடித்திருக்கிறார். பிற்பாதியில் பாசத்தந்தை வேடத்துக்கும் பொருத்தமாக இருக்கிறார்.
தலைக்கு கறுப்புமை பூசிக்கொண்டு வந்தால் முன்கதை வெள்ளைத்தலியுடன் வந்தால் நடப்புக்கதை என்று பிரித்துக் காட்டுகிறார்கள்.
360 டிகிரியில் அஜித் சுழன்றடித்துக்கொண்டிருந்தாலும் அதையும் மீறிக் கவனிக்க வைக்கிற வேடம் நயன்தாராவுக்கு. அவரும் ஏற்றுக்கொண்ட வேடத்துக்குப் பொருத்தமாய் மிடுக்காய் இருக்கிறார்.
மகளாக நடித்திருக்கும் அனிகா நன்று.
வில்லனாக நடித்திருக்கும் ஜெகபதிபாபு பொருத்தம்.
ரோபோசங்கர், தம்பி ராமய்யா, யோகிபாபு, விவேக் என நிறைய நகைச்சுவை நடிகர்கள். ஒரு சில இடங்களில் சிரிப்பு வெடி, பல இடங்களில் கடி.
வெற்றிபழனிச்சாமியின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகு நெஞ்சை அள்ளுகின்றது. மும்பையிலும் குறைவில்லை. மழையில் நடக்கும் சண்டை சிறப்பு.
இமானின் இசையில் கண்ணான கண்ணே பாடல் இனிமை, மற்றவை துள்ளல் வகை.
மகளுக்காக வேலைக்காரராக மாறும் அஜீத், கருவுற்றிருப்பதை அறிந்ததும் பலநாள் கனவைக் கசக்கிப் போடும் நயன்தாரா, துரை அங்கிளைப் பார்க்கும்போது என்னவோ செய்ய்து எனும் அனிகா ஆகியோரின் பாத்திரப்படைப்புகளுக்காக இயக்குநர் சிவாவைப் பாராட்டலாம்
அதேநேரம், ஒருவரிக்கதை அழுத்தமில்லாத திரைக்கதை ஆகியனவற்றால் சலிப்பு ஏற்படுவதற்கும் அவரே பொறுப்பு.










