விசித்திரன் – திரைப்பட விமர்சனம்

மருத்துவத்துறையில் நடக்கும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் படங்கள் வரிசையில் தனித்துவம் காட்டும் படமாக வந்திருக்கிறது விசித்திரன்.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், வேடத்தின் பொறுப்புணர்ந்து அதற்கு ஆயிரம்விழுக்காடு நியாயம் செய்ய நினைத்திருக்கிறார்.
இளமை மிடுக்கு, காதல் பொறுப்பு, நடுத்தர கனிவு ஆகிய மூன்று வெவ்வேறு வயது மற்றும் காலகட்டங்களை காட்சிகளில் சொன்னால் மட்டும் போதாது என உடலமைப்பு மற்றும் உடல்மொழியிலும் அவற்றைக் கொண்டுவரக் கடுமையாக உழைத்திருக்கிறார்.
பீடி பிடித்துக்கொண்டு தொப்பை சரிய மெதுவாக அவர் நடந்துவரும் காட்சிகள் அவருடைய மெனக்கெடலுக்கு சாட்சிகள்.
கடைசிக்காட்சியில் கண்ணீர் வரவைத்துவிடுகிறார்.
நாயகிகளாக பூர்ணா, மதுஷாலினி ஆகிய இருவர். இருவரில் பூர்ணாவுக்குக் கூடுதல் காட்சிகள் மற்றும் நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய பாத்திரம். புதிய வாழ்க்கையில் இருக்கும் நேரத்தில் மகளைக் கொண்டுவந்துவிடும் ஆர்.கே.சுரேஷைத் திரும்பிப் பார்க்கிற பார்வையில் தான் சிறந்த நடிகை எனக் காட்டிவிட்டார்.
நாயகனின் நண்பர்களாக வரும் இளவரசு, மாரிமுத்து உள்ளிட்டோரும் தங்கள் பங்கை நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள்.பகவதிபெருமாளின் வேடமும் அதற்கு அவர் காட்டியிருக்கும் சிரத்தையும் நன்று.
வெற்றிமகேந்திரனின் ஒளிப்பதிவு நின்று நிதானமாகக் காட்சிகளை விளக்கிச் செல்கிறது.
ஜீ.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் காட்சிகளோடு இரண்டறக்கலந்துவிட்டன. பின்னணி இசை காட்சிகளின் தன்மையை உயர்த்திப் பிடிக்கிறது.
மருத்துவத்துறை ஊழலை மையமாகக் கொண்ட ஒரு துப்பறியும் கதையில் காதல், பாசம், பெரும் தியாகம் ஆகியனவற்றைக் கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் பத்மகுமார். யாரும் எதிர்பார்த்திரவியலாத இறுதிக்காட்சி படத்துக்குப் பெரும்பலம்.
இயக்குநரின் எண்ணத்தைச் செயலாக்கத் தன்னை வருத்தி நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷுக்கு விருதுகள் காத்திருக்கின்றன.