இன்றுமுதல் வேலைநிறுத்தம்,மீறினால் நடவடிக்கை – விஷால் அதிரடி
தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்காக அந்த அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக வசூலிக்கின்றன.
புதிய படங்களைத் திரையிடுவதற்கு டிஜிட்டல் சேவை அமைப்புகள் ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர். இதுபோல் மலையாளம், தெலுங்கு, கன்னட திரைப்படத் தயாரிப்பாளர்களும் டிஜிட்டல் சேவைக் கட்டணத்தைக் குறைக்க வற்புறுத்தினர்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று ( மார்ச் 1,2018 வியாழக்கிழமை) முதல் புதிய படங்களை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் வெளியிட மாட்டோம் என்றும் அறிவித்தனர். இந்தப் போராட்டத்தை கைவிட தயாரிப்பாளர்களுக்கும் டிஜிட்டல் சேவை அமைப்பினருக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த பிரச்சினையில் இறுதி முடிவு எடுப்பது குறித்து ஆலோசிக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் பிப்ரவரி 28 மாலை நடந்தது.
அந்தக்கூட்டத்துக்குப் பிறகு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மார்ச் 1-முதல் புதுபடங்கள் வெளியீடு நிறுத்தம் தொடரும்
புதிய திரைப்படங்கள் நிறுத்தம் சம்பந்தமாக அரசிற்குக் கடிதம் அளித்தல். இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு முடித்து கொடுக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.
டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடேர்ஸ் உடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் நியாயமான வகையில் எந்த வித உடன்படிக்கையும் ஏற்படாததால் இனி அவர்களோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதுவரை தயாரிபளர்கள் செலுத்தி வந்த VPF கட்டணத்தினை இனி செலுத்துவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இனி handling Charges மட்டுமே செலுத்துவது முடிவெடுக்கப்பட்டது.
திரையரங்குகளில் திரையரங்கு உரிமையாளர்களே Projector and Server சொந்தமாக வைத்துகொள்ள வேண்டும் அந்தத் திரையரங்குகளுக்கு மட்டுமே திரைப்படங்களை வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு வேண்டுமாய் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்ட், தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம், தெனிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளைக் கேட்டு கொள்கிறோம்.
இந்த பிரச்சனை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைத்தல் என்று முடிவெடுக்கப்பட்டது.
தயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த நலன் கருதி நமது சங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவினை மீறும் எந்த ஒரு தயாரிப்பாளர் இருந்தாலும் அவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.