September 23, 2026
சினிமா செய்திகள் நடிகர்

சினிமா ஸ்டிரைக்கை முடிக்க விஷால் நடத்திய ரகசியப் பேச்சுவார்த்தை என்ன ஆனது தெரியுமா?

தமிழ்த்திரையுலகின் வேலை நிறுத்தம் தொடர்வதால் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் தொழிலாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதனால் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நெருக்கடி தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தார் விஷால்.

வேலைநிறுத்தம் தொடங்கியபின் முதன் முறையாக, இரகசிய முத்தரப்புப் பேச்சுவார்த்தை இன்று நடந்தது.

சென்னையின் நட்சத்திர விடுதியொன்றில் நடந்த அந்தப் பேச்சுவார்த்தையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சார்ந்தவர்கள், விநியோகஸ்தர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனராம்.

பேச்சுவார்த்தையின் போது விஷால், திரையரங்கக் கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம், தின்பண்டங்கள் விலை ஆகியன் பற்றிப் பேசியிருக்கிறார்.

பதிலுக்கு திரையரங்கு உரிமையாளர்களும், பெரிய படங்களுக்கு நீங்கள் சொல்லும் விலை எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருக்கிறது. எல்லாப் படங்களையும் சத்விகித அடிப்படையில் திரையிடுவதென்றால் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

திரையரங்குகளில் சொந்தமாக புரொஜெக்டர் வேண்டும் என்ற விஷாலின் கோரிக்கையும், க்யூப் நிறுவனத்துடனான சட்ட ரீதியான ஒப்பந்தம் காரணமாக நிறைவேற்ற இயலாது என்று சொல்லப்பட்டுவிட்டதாம்.

இதனால் இரகசியப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆக திரையுலகின் நெருக்கடி தொடர்கிறது.

Related Posts