சினிமா செய்திகள்

விஜய் கலந்து கொண்ட சர்கார் வெற்றி கொண்டாட்டத்தால் மீண்டும் சர்ச்சை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்த ‘சர்கார் ‘ திரைப்படம் நவம்பர் 6 தீபாவளியன்று வெளியானது.

தேர்தல் மற்றும் வாக்கு அரசியலைப் பேசும் படமாக அது அமைந்திருந்தது. இந்தத் திரைப்படம் ஆளும் அதிமுக கட்சியின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது.

படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற பெயரை படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்தது ஆளும் தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், இலவசங்கள் குறித்தும் காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதை நீக்கக் கோரியும் அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர்.

இதனால் படத்தில் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன. சில வசனங்கள் அமைதிப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியர் விவேக், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி ஆகியோர் நேற்று சந்தித்துள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு கேக்கின் மேலிருக்கும் மெழுகுவத்தியை ஒளியேற்றுவதுபோல் ஒரு புகைப்படத்தை ‘ Whose hand is this ?’ என்ற வாசகத்துடன் வெளியிட்டிருந்தார்.

அந்த கேக்கில் சிறு மிக்ஸி,சிறு கிரைண்டர் ஆகியனவற்றை வைத்து அலங்காரப்படுத்தப்பட்டிருந்தது.

இலவசப் பொருள்கள் பற்றிய விமர்சனத்துக்கு எதிர்ப்பு வந்து படத்தில் அந்தக்காட்சியை நீக்கிவிட்டாலும், வெற்றியைக் கொண்டாடும் கேக்கில் அவற்றை வைத்ததோடு அந்தப் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

இது விஜய் மற்றும் சர்கார் படக்குழுவினர் ஆளும் அதிமுக அரசுக்கு விடுத்த சவால் என்றே பலரும் சொல்கின்றனர்.இதனால் சமூக வலைதளங்களில் மீண்டும் சர்ச்சை தொடங்கிவிட்டது.

Related Posts