சினிமா செய்திகள்

அல்லுஅர்ஜுனால் ஒரு குடும்பமே சிதைந்துவிட்டது – முதலமைச்சர் குற்றச்சாட்டு

தெலங்கானாவில் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் எம்ஐஎம் கட்சி சமஉ அக்பருதீன், புஷ்பா-2 படம் பார்க்க வந்து தாய் இறந்து, மகன் கோமாவில் உள்ள சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது….

புஷ்பா- 2 படம் பார்க்க படத்தின் ஹீரோ, ஹீரோயின் படக் குழுவினர் வருவதாக போலீசாருக்கு முன்கூட்டியே பாதுகாப்பு கேட்டு தியேட்டர் நிர்வாகத்தினர் கடிதம் வழங்கினர். ஆனால் திரையரங்கிற்குள் சென்று வர ஒரே ஒரு வழி உள்ளதால், பிரபலங்கள் வந்தால் பிரச்னை ஏற்படும் என போலீசார் அனுமதி வழங்கவில்லை.

ஆனாலும் பட ஹீரோ அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு சென்றார். நேரடியாக தியேட்டருக்கு போய்ப் படம் பார்த்துவிட்டுச் சென்றிருந்தால் பிரச்னை வந்திருக்காது. தியேட்டருக்கு செல்லும் வழியில் காரின் ரூப் டாப் திறந்து ரோட் ஷோ செய்து கொண்டிருந்தனர். இதனால் அனைத்து தியேட்டர்களில் இருந்த பொதுமக்கள், ஒரே நேரத்தில் சந்தியா தியேட்டரை நோக்கி வந்தபோது, ​​திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அல்லு அர்ஜூன் தியேட்டருக்குள் சென்றபிறகு கூட்ட நெரிசலை போலீசார் கலைத்துப் பார்த்தபோது ஒரு தாயும், மகனும் கைகளைப் பிடித்தபடி எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தனர்.

உடனடியாக போலீசார் முதலுதவி சிபிஆர் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் ரேவதி உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் தற்பொழுதும் கோமாவில் உள்ளார். இருப்பினும் அல்லு அர்ஜூன் தியேட்டருக்குள் படம் பார்த்துக்கொண்டே இருந்ததால் வெளியே இரசிகர்கள் அப்படியே சூழ்ந்திருந்தனர். தியேட்டருக்குள்ளும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் நள்ளிரவு 12 மணிக்கு வலுக்கட்டாயமாக அல்லு அர்ஜூனை தியேட்டரில் இருந்து வீட்டிற்குச் செல்லும்படி வெளியேற்றினர். திரும்பிச் செல்லும் போது கூட, கார் ரூப் டாப்பில் இருந்து ரோட் ஷோ செய்து கொண்டு சென்றார்.

மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிக்கும் நடுத்தர குடும்பத்தினர் தனது மகன் அந்த ஹீரோவின் இரசிகன் என்பதால் ஒருவருக்கு ரூ.3000 டிக்கெட் என 4 பேருக்கு ரூ.12 ஆயிரம் செலவு செய்து படம் பார்க்க வந்துள்ளனர். தாய் இறந்து மகன் உயிருக்குப் போராடி வருகிறான். ஒரு குடும்பமே சிதைந்துவிட்டது. அல்லு அர்ஜூன் கால்களை இழந்தரா, கண்களை இழந்தாரா அல்லது கிட்னியைத்தான் இழந்தாரா? அவரது இல்லத்துக்கு பிரபலங்கள் விரைந்து சென்று பார்க்க வேண்டிய அவசியம் என்ன?. தியேட்டர் நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சினிமா பிரபலங்கள் யாராவது அக்கறை காட்டினீர்களா?

அவர்கள் குடும்பத்தைப் பார்க்கக் கூட அல்லுஅர்ஜூனோ அல்லது அவரது படக்குழுவோ, திரைப்படத் துறையினர் ஒருவர் கூடச் செல்லவில்லை. ஆனால் அல்லு அர்ஜூன் ஜாமீனில் வெளியே வந்தால் வரிசைகட்டிக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றனர். அரசையும் போலீசாரையும் சில அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். அல்லு அர்ஜூனால்தான் சந்தியா தியேட்டர் சம்பவம் நடந்தது. அவர் வரவில்லை என்றால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது, ரேவதியின் குடும்பம் பாதிக்கப்பட்டிருக்காது. இதற்கு காரணமானவர்கள் யாரையும் தப்பவிடமாட்டோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும் படங்களுக்கு பிரிமீயம் ேஷா வெளியிட அனுமதி தர முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதற்கு விளக்கமளித்து நடிகர் அல்லு அர்ஜூன் நேற்றிரவு அளித்த பேட்டியில் கூறியதாவது….

மூன்றாண்டுகள் இரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும், அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று மிகவும் சிரமப்பட்டு நடித்து எடுத்த படம் புஷ்பா. இரசிகர்களின் விருப்பங்களை, அவர்களின் எதிர்பார்ப்பு எவ்வாறு உள்ளது? வரவேற்பு எப்படி இருக்கிறது? என்பதை ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போதும் தியேட்டரில் இரசிகருடன் சென்று பார்ப்பது வழக்கம். இந்த அசம்பாவிதம் நடந்த தியேட்டரில் கடந்த 20 ஆண்டுகளாக 30 சினிமா வெளியானபோது. முதல் நாளே அதே தியேட்டரில் சென்று படம் பார்த்துள்ளேன். ஆனால் இந்த முறை யாரும் எதிர்பாராத விதத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. எனவே இந்த விபத்தில் இறந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிகளவில் இரசிகர்கள் இருந்ததால் போலீசாரும் அங்கிருந்த பவுன்சர்களும் ஒருமுறை வெளியே வந்து நீங்கள் இரசிகர்களுக்கு முகத்தைக் காண்பித்து கையசைத்தால் அவர்கள் சென்று விடுவார்கள் எனக் கூறினார்கள். அதனால் தான் தியேட்டருக்கு மிக அருகில் கார் செல்லும்போது நான் காரில் இருந்து ரூப் டாப்பில் இருந்து வெளியே வந்து இரசிகர்களுக்கு அன்பை வெளிப்படுத்தும் விதமாக கைகளை உயர்த்தி அவர்களின் வரவேற்பை ஏற்றேன். சினிமா தொடங்கிய சில மணி நேரத்திற்குப் பிறகு வெளியே கூட்டம் அதிகமாக இருக்கிறது. போலீசார் கூட்டத்தைக் கட்டுப்படுத்த சிரமம் ஏற்படுவதாகவும், எனவே நீங்கள் செல்ல வேண்டும் என எனது பாதுகாப்பு ஊழியர்கள் தெரிவித்தனர்.

எனவே அங்கிருந்து நான் எனது மனைவி குழந்தைகளுடன் சென்றுவிட்டேன். அப்போதும் போலீசார் நான் செல்வதற்கு வழியை ஏற்பாடு செய்தனர். இந்த இடைவெளியில் ஒரு இரசிகை இறந்ததும் அவரது மகன் கோமா நிலைக்குச் சென்றதும் எனக்கு மறுநாள் காலை தான் தெரியவந்தது. இந்தத் தகவலை அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் விதமாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நான் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்து கொண்டதாக நிறைய தவறான தகவல்கள் உள்ளன. இவை தவறான குற்றச்சாட்டுகள்.

இது அவமானகரமானது. எனது குணநலன் படுகொலை. என்னைப்பற்றி நிறைய தவறான தகவல்கள், நிறைய பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இது தனிப்பட்ட முறையிலோ, அரசியல் ரீதியாகவோ, அரசையோ நான் குற்றம் சாட்டவில்லை. என்னைப் பற்றி தவறான கருத்துகளைத் தெரிவித்ததால் அதற்கு விளக்கம் அளிக்கின்றேன். எனக்கு அரசு அனுமதி வழங்கினால் இப்போது கூட நான் அவர்கள் குடும்பத்தைச் சென்று சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts