அதிரடிக் கூட்டணி அமைந்தது – விஜய் 69 படம் குறித்த இற்றைத்தகவல்
விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் குறித்துப் பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.இப்படம் விஜய்யின் 68 ஆவது படம்.
இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும், விஜய் 69 படம் குறித்த எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
வழக்கமாக விஜய்யின் அடுத்தபடம் என்றாலே எதிர்பார்ப்பு இருக்கும்.இப்போது, ஒரு படத்தை முடித்துவிட்டு அரசியலில் ஈடுபடவிருக்கிறேன் என்று விஜய் சொல்லியிருப்பதால், விஜய் 69 தான் விஜய்யின் கடைசிப்படம் என்று சொல்லப்படுகிறது. அதனால் அப்படம் குறித்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
விஜய் 69 படத்தை இயக்கப்போவதாக கார்த்திக்சுப்புராஜ்,தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம்,இயக்குநர் சசிகுமார், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி உட்பட பல்வேறு இயக்குநர்கள் பெயர் சொல்லப்பட்டுவந்தது.
அதேபோல் விஜய் 69 படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்தும் பல தகவல்கள் வெளியாகின. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஈவிவி நிறுவனம் தயாரிப்பில் நடிக்கிறார் என்றும் மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்திலேயே நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டுவந்தது.
இந்நிலையில், விஜய் 69 படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகியன மட்டுமின்றி கதாநாயகியும் முடிவாகிவிட்டார் என்கிற இற்றைத் தகவலொன்று உலவுகிறது.
அதன்படி, விஜய் 69 படத்தை இயக்கப்போவது இயக்குநர் அட்லி என்று முடிவாகியிருக்கிறதாம். அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது.
அதோடு அப்படத்தின் நாயகியாக சமந்தா நடிக்கவிருக்கிறார் என்றும் அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.
மேலும் விஜய் 69 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் உறுதியாகியிருக்கிறதாம்.
அட்லி, விஜய், அனிருத், சமந்தா, சன் பிக்சர்ஸ் ஆகிய கூட்டணியே அதிரடிக் கூட்டணிதாம். அதோடு இன்னுமோர் முக்கியமான தகவலும் அதற்குள் இருக்கிறதென்றும் சொல்கிறார்கள்.
மிகஅண்மையில், விஜய் 69 படத்துக்கான திரைக்கதையை இயக்குநர் அட்லி விஜய்யிடம் சொன்னார். இரண்டு மணிநேரம் அவர் சொன்ன திரைக்கதையைக் கேட்டு விஜய் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக அந்தப்படத்தின் வேலைகள் வேகம் பிடித்திருக்கின்றனவாம்.விஜய்யின் 68 ஆவது படமான தி கோட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் விஜய் 69 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.
செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் விஜய் 69 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.











