இழுபறியில் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் படம்
விஜய் நடிப்பில் இப்போது மாஸ்டர் படம் தயாராகியிருக்கிறது.இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். தமன் இசையமைக்கவிருக்கிறார்.
இவை எல்லாமே முடிவாகி முன் தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தம் உதவியாளர்களுடன் ஜூம் செயலி மூலம் திரைக்கதை விவாதம் செய்துகொண்டிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், சன் பிக்சர்ஸ் தரப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. ஏன்? என விசாரித்தால், விஜய் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால், திரைக்கதை உருவாக்கம் உள்ளிட்ட வேலைகள் தொடரட்டும், சம்பள விசய்த்தில் உடன்பாடு எட்டப்படவில்லையென்றால் அப்படியே வேறு தயாரிப்பு நிறுவனத்துக்கு மாறிவிடலாம் என்று பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதனாலேயே அதிகாரப் பூர்வ அறிவிப்பு வரவில்லையென்று சொல்கிறார்கள்.











