விட்டுக்கொடுத்த துணிவு முந்திய வாரிசு

2023 பொங்கல் திருநாளையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு, அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.
சனவரி 12 ஆம் தேதி வியாழக்கிழமையே இவ்விரு படங்களும் வெளியாகவிருக்கின்றன.
பொதுவாகவே பெரிய நடிகர்கள் படம் வெளியாகும்போது அதிகாலையில் திரையிடும் வழக்கம் இருந்து வருகிறது.
அதுபோல இவ்விரு படங்களுக்கும் அதிகாலைக் காட்சி இருக்குமா? என்றால், அதற்கு முன்பாகவே இருக்கிறது என்கிறார்கள்.
அதுமட்டுமின்றி இரண்டு படக்குழுவினரும் பரஸ்பர உடன்பாடு செய்து காட்சிகளின் நேரங்களை மாற்றி வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஒரே நேரத்தில் இரண்டு படங்களையும் திரையிட்டால் இருதரப்பு இரசிகர்களிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், இரண்டு படங்களையும் வெவ்வேறு நேரங்களில் திரையிடுவது என முடிவெடுத்திருக்கிறார்களாம்.
அதன்படி, நள்ளிரவு ஒரு மணிக்கே வாரிசு படம் திரையிடப்படுமென்றும் அதிகாலை ஐந்து மணிக்கு துணிவு படம் திரையிடுவது என்றும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
வாரிசு படத்தை முதலில் திரையிடுவது என்கிற முடிவை துணிவு படத்தை வெளியிடும் உதயநிநியும் ஏற்றுக்கொண்டாராம்.
அதனால், நள்ளிரவு ஒரு மணிக்கு வாரிசு படத்தைத் திரையிடும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதனால் இரண்டு படங்களையும் திரையிடும் திரையரங்கினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.