சிம்பு படத்தைக் கைப்பற்றிய உதயநிதி

கௌதம்மேனன் – ஏ.ஆர்.ரகுமான் – சிம்பு கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.
விண்ணைத் தாண்டி வருவாயா, ‘அச்சம் என்பது மடமையாடா’ ஆகிய படங்களுக்குப் பிறகு உருவாகியிருக்கும் இந்தக் கூட்டணிக்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 10.44 மணிக்கு உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையைப் பெற்றுள்ளதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 8 அன்று ஆர்யா நடித்துள்ள கேப்டன் படத்தை வெளியிடுவதும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படம் வெளியான ஒரேவாரத்தில் சிம்பு படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.