சினிமா செய்திகள்

சிம்பு படப்பிடிப்பு இன்று – விவரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதை ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன்.

அவர் அறிவிப்பதற்கு முன்பே அப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன. ஜூன் 16,17 ஆகிய நாட்களில் அப்படத்துக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்தது.பட அறிவிப்பையே ஒரு காணொலியாக வெளியிட வேண்டும் என்பதற்காக அந்தப் படப்பிடிப்பு நடந்தது.

அன்று காலை எட்டுமணிக்கெல்லாம் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து விளம்பரப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு.

சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நடந்த அந்த விளம்பரப்படப்பிடிப்பில் 200 க்கும் மேற்பட்ட துணைநடிகர்களுடன் சிம்பு மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இப்போதைக்கு இந்த விளம்பரத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் நெல்சன், தேவைப்பட்டால் படத்திலும் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

வெற்றிமாறன் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த வடசென்னைக்கு முந்தையதான ராஜன் வகையறா திரைக்கதைதான் படமாகவிருக்கிறது என்று சொல்லப்பட்டது.

அதன் உரிமை நடிகர் தனுஷிடம் இருப்பதாகவும் அவர் தடையில்லாச் சான்று தருவாரா? என்பதில் ஐயம் ஏற்பட்டதால்,சட்டப்படி அவர் எதையும் செய்துவிட முடியாதபடி திரைக்கதையை மாற்றி அமைத்துவிட்டாராம் வெற்றிமாறன்.அதன்பின், தனுஷ் இதற்காகப் பணம் எஹுவும் வேண்டாமெனச் சொல்லிவிட்டார் என்று தான் வெளியிட்ட காணொலியில் வெற்றிமாறன் சொல்லியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

இதனால்,முதலில் ஒரு தோற்றத்தில் மட்டும் நடிக்கவிருந்த சிம்பு இப்போது இரண்டுவித தோற்றங்களில் நடிக்கவிருக்கிறாராம்.

ஜூன் 16,17 ஆகிய நாட்களில் நடந்த படப்பிடிப்பில், ஒரு தோற்றத்தின் படப்பிடிப்பை நடத்தினார்கள்.இப்போது இன்னொரு தோற்றத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

இன்று அதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இதற்காக தென்சென்னைக்குள் வடசென்னை போன்ற பிரமாண்ட அரங்கை அமைத்திருக்கிறார்கள்.அந்த அரங்கில், இரண்டு நாட்கள் தேவைப்பட்டால் இன்னும் ஒருநாள் கூடுதலாகக் கூட அந்தப்படப்பிடிப்பு நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.

இதனிடையே இந்தப்படத்தில் நடிகர் மணிகண்டன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்ப்ந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.அதோடு கன்னடத்தில் இருந்து ஒரு முன்னணி நடிகர் இந்தப்படத்தில் நடிப்பார் என்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

இம்மாத இறுதியிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெறும் என்று சொல்கிறார்கள்.

நல்லபடியாக நடக்கட்டும்.

Related Posts